நம்ம ஊரு நடப்பு

அறிவியல் பாடங்களை எளிதாக படிக்க திக் ஷா செயலியில் புதிதாக 400 வீடியோ காட்சிகள் பதிவு

செய்திப்பிரிவு

மாணவர்களுக்கான ‘திக் ஷா' செயலியில் 400 எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய விடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் மூலம் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை எளிதில் புரிந்துகொள்ளலாம். பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தில் க்யூ.ஆர். குறியீடு மூலமாகவும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வரு கிறது.

இதற்கு வசதியாக ‘திக் ஷா' எனும் செயலியை (diksha app) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் சிபிஎஸ்இ முதல் அனைத்து மாநில பாடத்திட்டங்கள், வகுப்பு மற்றும் பாடவாரியான பாடநூல்கள், பயிற்சி தேர்வுகள், கற்றல் வழிமுறைகள் டிஜிட்டல் விடியோ வடிவில்
பதிவேற்றப்பட்டுள்ளன.

பாடப்புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திலும் கொடுக்கப்பட்டுள்ள க்யூ.ஆர். குறியீட்டை செயலி மூலமாக 'ஸ்கேன்' செய்யும்போது, அதற்குரிய வீடியோ தோன்றும். இது, ஆசிரியர் பாடம் நடத்தும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் வீட்டில் படிக்கும்போது, இந்த முறையைப் பயன்படுத்தி, பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம். இந்த செயலியை தமிழகத்தில் ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன் பெறும் வகையில், புதிதாக 400 வீடியோக்கள் திக் ஷா செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய வீடியோக்கள், பாடத்தலைப்புகளுக்கு ஏற்ப, தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவியல் சோதனைகளை, மாணவர்கள், வீட்டிலே எளிதாக செய்து பார்க்கலாம். மாணவர்கள் திக் ஷா செயலியை வீட்டில் இருக்கும் போது பயன்படுத்தி அறிவியல் பாடங்களை எளிதாக படிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT