அரசு பள்ளி மாணவர்களிடம் ஆங்கில பேச்சுத்திறன் வளர்க்க, திருச்சியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்த வும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கற்றல், கற்பித்தல் பணிகளை ஆசிரியர்கள் சிறந்த முறையில் மேற்கொள்வது குறித்தும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு அண்மையில் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர்பகுதியில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் 5-ம் தேதி தொடங்கியது. இப்பயிற்சியை திருச்சி மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்வின்சென்ட் டி பால், வட்டாரக் கல்விஅலுவலர்கள் அருள்தாஸ் நேவீஸ், ஜெயலட்சுமி, டயட் ஒருங்கிணைப்பாளரும், முதுநிலை விரிவுரையாளருமான லியோ டேவிட் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் கலாவதி, ரோஸ்லின், மதிபிரபா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இந்த ஒரு வார பயிற்சி இன்று(செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியர் கே.எஸ்.ஜீவானந்தம் மற்றும் ஆசிரியர்கள் செய்துள் ளனர்.