நம்ம ஊரு நடப்பு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? - மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கவுன்சலிங்

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ்-2 பொதுத்தேர் வுக்குத் தயாராகும் மாணவர்கள் தேர்வை எதிர் கொள்ளவும், தேர்வு பதற்றத்தைப் போக்குவதற்கும் எச்சிஎல் நிறுவனமும், செல்லமுத்து அறக்கட்டளை மனநல பயிற்சி மையமும் கவுன்சலிங் வழங்கி வருகின்றன.

மதுரையில் 15 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளும், 9 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் 25 மாணவர்களைத் தேர்வு செய்துஅவர்களுக்கு தனி வகுப்பறையை உருவாக்கி சிறப்பு ஆசிரியர்கள் மூலம் ப்ளஸ்-2 தேர்வுக்கு தயார் செய்கின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு ‘நீட்’, ஜேசிஐ தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவர்களுக்கு கல்வியில் மட்டுமின்றி ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக இருக்க எச்சிஎல் நிறுவனம், செல்லமுத்து அறக்கட்டளை மனநலப் பயிற்சிமையம் ஆகியவை உதவியுடன் ‘ஹேப்பிஸ்கூல்’ திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே நடத்தி வருகிறது.

தற்போது இந்த மாணவர்கள் , எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வை எதிர்கொள்வதற்கும், அவர்களுக்கு தேர்வு பதற்றம், மன அழுத்தத்தைப் போக்கவும் எச்சிஎல் பவுண்டேஷன், எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மனநல பயிற்சி மையம் ஆகியவை உதவியுடன் கவுன்சலிங் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. முதற்கட்டமாக பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மனநல கவுன்சலிங் பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் குருபாரதி, கண்ணன் ஆகியோர் பேசினர். பள்ளியின் தலைமை ஆசிரியை மீனாட்சி, ஹேப்பி ஸ்கூல் திட்டத் தலைவர் எஸ்.செல்வமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஹேப்பி ஸ்கூல் திட்டத் தலைவர் எஸ்.செல்வமணி கூறியதாவது:

மாணவர்களுக்கு மனநலப் பயிற்சி‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மனநலம், அதன் முக்கியத்துவம் குறித்து வாழ்க்கைத் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களுக்கு மனநலப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் தேர்வு எழுதுவது எப்படி?, அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? ஆகிய கருத்துகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தேர்வு பதற்றம், பயம், மன அழுத்தத்தை எப்படிக் கையாளுவது, அதில் இருந்து விடுபடுவது, தேர்வு நேரத்தில் என்ன செய்யக் கூடாது, என்ன செய்ய வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்தும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. தேர்வுக்கு முந்தைய நாள் சரியாக சாப்பிடாமல் படித்துவிட்டுச் சென்றால் உடல் ஆரோக்கியம் கெட்டு தேர்வு மையத்தில் தூங்கிவிடுவார்கள் அல்லது படித்தது நினைவுக்கு வராமல்தேர்ச்சி பெறுவதே சிரமமாகிவிடும். அதனால், தேர்வு நேரத்தில் படிப்பைப்போல் உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தேர்வு நாட்களில் எத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்வது, எப்படி ஓய்வு எடுப்பது, படித்ததை எப்படி விடைத்தாளில் எழுதுவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினோம். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது. அதை வாழ்க்கையின் முடிவாக எடுத்துவிடக் கூடாது. அதில் அதிக மதிப்பெண் எடுத்து விடுவோம் என்ற பெரும் ஆவல் ஏற்படக்கூடாது. குறைவாக மதிப்பெண் எடுத்துவிட்டோம் என்பதற்காக மனம் தளரவும் கூடாது. அதை ஒரு தேர்வாக மட்டுமே கடந்துசெல்ல வேண்டும். வாழ்க்கையை ஒப்பிட்டு அதை மதிப்பிடக் கூடாது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் ஏமாற்றம், தற்கொலை எண்ணம் வரவேகூடாது.

அதற்காக ‘BASS’ என்ற வாசகத்தை வெளியிட்டோம். ‘B’ என்றால் என்றால் தேர்வுக்கு எப்படி எழுதுவது, எப்படி தயாராவது என்பதையும், ‘A’ என்றால் தேர்வை எப்படி எடுத்துக் கொள்வது என்ற மனப்பாங்கு பற்றியும், ‘S’ என்றால் உடல் ரீதியாக, மன ரீதியாக தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பதை பற்றியும், இன்னொரு ‘S’ என்றால் பரீட்சைக்கு முன்பும், பின்பும் வரும் பதற்றத்தை எப்படிக் கையாள்வது என்பதையும் குறிப்பிடும்.

இந்த ‘BASS’ வாசகத்தை பற்றி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம்.

இவ்வாறு செல்வமணி கூறினார்.

SCROLL FOR NEXT