கரூர் மாவட்டம் கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் சொந்த நிதியிலி ருந்து ரூ.2 லட்சம் வழங்கினர்.
கரூர் மாவட்டம் கார்வழியில் அரசுஉயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 89 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் இல்லாததால், மேல்நிலைக் கல்விக்கு வேறு பள்ளிக்கு மாறவேண்டும் என்பதால், 6 முதல் 10-ம் வகுப்பு வரை சேர வேண்டிய மாணவர்கள் பலர் இப்பள்ளியில் சேராமல் வேறு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். மேலும், கார்வழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததால், இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்விக்காக நீண்ட தொலைவு செல்லவேண்டி உள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2லட்சம் செலுத்தவேண்டும்.
இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தங்களது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் பெரியசாமியிடம் அண்மையில் வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.