நம்ம ஊரு நடப்பு

கரூர் அருகே அரசு பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

செய்திப்பிரிவு

கரூர் அருகே அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்விச்சீர் வழங்கினர்.

கரூர் மாவட்டம் வரவணை அருகேஉள்ள வேப்பங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா, மரக்கன்று நடும் விழா, சமுதாய காய்கறி தோட்ட தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கடவூர் வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட சட்டப் பணிகள் இயக்கத் தலைவரும் சார்பு நீதிபதியுமான சி.மோகன்ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய வேளாண் விஞ்ஞானி திரவியம், பசுமை குடி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், வேல்முருகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், கரூர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத் துறைத்தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மராஜ் வரவேற்றார்.

விழாவின் முக்கிய அம்சமாக, அமெரிக்காவில் கணிப்பொறி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவரான நரேந்திரன் சார்பில் ரூ.2.5 லட்சம்மதிப்பிலான நாற்காலிகள், விளையாட்டுப் பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை, அவரது தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான மு.கந்தசாமி பள்ளிக்கு கல்விச் சீராக வழங்கினார்.

மரக்கன்றுகள் இலவசம்

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நீதிபதி சி.மோகன்ராம் மரக்கன்றுகளை நட்டார். மஞ்சாநாயக்கன்பட்டி புலவர்கரூர் கண்ணல் விழாவில் பங்கேற்றவர்களுக்கு தென்னை மரக்கன்று களை இலவசமாக வழங்கினார்.

மேலும், முன்னாள் மாணவர் நரேந்திரனின் முயற்சியில், வேப்பங்குடி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பள்ளி அருகே சமுதாய காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டு. அங்கு காய்கறி விதைகள் விதைக்கப்பட்டன. பசுமை குடி அமைப்பு இத்தோட்டத்தை பராமரிக்கும். இதில் விளையும் காய்கறிகளை கிராம மக்கள் தங்கள்சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT