தேசிய வில் வித்தைப் போட்டியில் சாதனைப் படைத்து வரும் திருச்சி பள்ளி மாணவி, இந்திய அணியில் ஜூனியர் பிரிவில் இடம் பெறுவதும், போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதுமே தனது இலக்கு என்றார்.
திருச்சி பிராட்டியூர் ஜேகே நகரைச் சேர்ந்த தம்பதி திருப்பதி- அமுதா ஆகியோரது மகள் தி.பிரியதர்ஷினி (15). இவர், திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள அமிர்த வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான வில் வித்தைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
இதுதொடர்பாக மாணவி பிரியதர்ஷினி கூறியது:
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் வரும் வில் வித்தை காட்சிகளை பார்ப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதேநேரம் நான் 7-ம் வகுப்பு படித்தபோது பள்ளியில் மாலை நேர வில் வித்தைப் பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதனால் உடனடியாக வில் வித்தை பயிற்சியில் சேர்ந்தேன்.
முதலில் 6 மாத அடிப்படை பயிற்சியில்தான் சேர்ந்தேன். படிப்படியாக வில் வித்தைப் போட்டியில் அதிக ஆர்வமாகிவிட்டது. சிபிஎஸ்இ பள்ளிகள் இடையே நடத்தப்பட்ட பல்வேறு நிலை போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்றுள்ளேன்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2017-ல்நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கமும், ஆந்திர மாநிலத்தில் 2018-ல் நடைபெற்ற தேசிய அளவிலான மினி சப் ஜூனியர் போட்டியில் வெண்கலமும், சென்னையில் 2019 அக்.19-ம் தேதி முதல் அக்.21-ம் தேதி வரை நடைபெற்ற தென் மண்டல அளவிலான போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளியும், பஞ்சாப் மாநிலத்தில் 2019 நவ.9-ம் தேதி முதல் நவ.14-ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் ரேங்கிங் பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளேன்.
போட்டியில் பங்கேற்பதில் பள்ளி நிர்வாகமும், பெற்றோரும், உடற்கல்வி ஆசிரியரும் எனக்கு போதிய ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், தினமும் குறைந்தது 3 மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொள்வதுடன், ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளையும் பார்த்து வருகிறேன்.
இந்திய அணியில் ஜூனியர் பிரிவில் இடம் பிடித்து, போட்டியில் பங்கேற்று வென்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும், திருச்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதை எனது இலக்காக கொண்டுள்ளேன். இவ்வாறு பிரியதர்ஷினி கூறினார்.