சென்னை மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமை மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் பண்புகளை கண்டறிந்து மேம்படுத்துவது, அவர்களின் தலைமைபண்பை வளர்ப்பது, ஆரோக்கியமான பள்ளிச்சூழலை உருவாக்குவது, கற்பித்தலில் புதிய உத்திகளை கையாள்வது மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது, பாலின விழிப்புணர்வு கல்வி அளித்தல், கலையோடு இணைந்து கற்றல் போன்றவை பயிற்சியின் தலையாய நோக்கங்கள் ஆகும்.
அந்த வகையில், சென்னைமாவட்ட அளவில் ஆசிரியர்கள்மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி திருவல்லிக்கேணி இந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது. இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏ.அனிதா தொடங்கிவைத்தார்.
இதில், மாவட்ட கல்வியியல் பயிற்சி நிறுவன முதல்வர் உஷாராணி, மாநகராட்சி கல்வி அதிகாரி ஆர்.பாரதிதாசன், உதவிதிட்ட அலுவலர் ஏ.டி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.