கோவை
கோவையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சிஅளிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுதி-1 பாடப்புத்தகத்துக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொகுதி-2 பாடப்புத்தகத்துக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது. இதுகுறித்து கோவைமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் கூறியதாவது:கோவை மற்றும் பேரூர் கல்வி மாவட்ட வேதியியல் ஆசிரியர் களுக்கு ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இயற்பியல் ஆசிரியர்களுக்கு அவிநாசி சாலை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும், எஸ்எஸ் குளம் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட கணித ஆசிரியர்களுக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 2-வது கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.குளம் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட வேதியியல் ஆசிரியர்களுக்கு ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இயற்பியல் ஆசிரியர்களுக்கு அவிநாசி சாலை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும், கோவை மற்றும் பேரூர் கல்வி மாவட்ட கணித ஆசிரியர்களுக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். வேதியியல் பாடத்துக்கு ஆசிரியர் கள் டி.ஆனந்த், ஏ.ராஜாமுகமது, கே.சுந்தரராஜன் ஆகியோரும் , கணித பாடத்துக்கு ஆசிரியர்கள் என்.தமிழ்செல்வன், எஸ்.குமார், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், இயற்பியலுக்கு ஆசிரியர்கள் கே.விஸ்வேந்திரகுமார், பி.ரிச்சர்டு பிரபு, ஜி.முத்தரசிஆகியோரும் பயிற்சிஅளிக்கின்றனர்.