நம்ம ஊரு நடப்பு

செட்டிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.7 லட்சத்தில் கலையரங்கம்: முன்னாள் மாணவர் உதவி

செய்திப்பிரிவு

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே அரசு பள்ளிக்கு முன்னாள் ஒருவர் தனது சொந்த நிதியில் கலையரங்கம் கட்டிக்கொடுக்க இருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பெயர் வெளியிட விரும்பாத மாணவர் ஒருவர், பள்ளிக்கு ரூ.7 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளார். இதற்கான பூமிபூஜை விழா பள்ளி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.அருளரங்கன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ.நாகமணி, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பின் சாசனத் தலைவர் ப.தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் மணி வரவேற்றார். நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் ராஜா சிதம்பரம், பொருளாளர் சொர்ணகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு அன்று இந்த கலையரங்கத்தை கட்டி முடித்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என அந்த முன்னாள் மாணவர் உறுதியளித்துள்ளார்.

SCROLL FOR NEXT