அறிவியல் ஆராய்ச்சி மனித சமுதாயத்துக்கு அவசியம் என்று மனோன்மணியம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிச்சுமணி வலியுறுத்தினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மருந்தாக்க வேதியியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு முகாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. துணைவேந்தர் கே.பிச்சுமணி தலைமை வகித்தார். பதிவாளர் கே.சந்தோஷ்பாபு, சென்னை ஐஐடி நிதியுதவி ஆராய்ச்சி மைய ஆலோசகர் பிரகஸ்பதி, பல்கலைக்கழக மருந்தாக்க வேதியியல் துறைத் தலைவர் இ.சுப்பிரமணியன், வேதியியல் துறைதலைவர் கண்ணன், உதவி பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் நெல்லை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக். பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக். பள்ளி, குட் ஷெப்பர்டு மெட்ரிக். பள்ளி, புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமை தொடங்கி வைத்து துணைவேந்தர் பிச்சுமணி பேசியதாவது: அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அறிவியலின் வெவ்வேறு துறைகளையும் மாணவ சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் அறிவியல்துறையில் மேற்படிப்பு படிக்கவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும் தேவையான உத்வேகத்தையும் அளிப்பதுதான் இந்த முகாமின் நோக்கம். தற்காலத்தில் அறிவியல் கற்பதும், அது குறித்த ஆராய்ச்சியும் மனித சமுதாயத்துக்கு அவசியம்.
அறிவியல் கற்பது மாணவர்களுடைய மேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் பயனுள்ளதாக அமையும்.
மாசுபடும் சூழலை தடுக்க அறிவியல் பயன்படுகிறது. உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சித் திட்டங்கள், அதன் மூலம் பலநிலைகளில் மாணவர்கள், முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை குறித்து பிரகஸ்பதி விளக்கினார். ஆஸ்பிரின் மற்றும் புற்றுநோய் மருந்தான சிஸ்பிளாஸ்டின் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பழனியாண்டவர் விளக்கிக் கூறினார். பல்கலைக்கழக துறைகளிலுள்ள வெவ்வேறு ஆராய்ச்சிக் கூடங்களை மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர்.