மதுரை
லட்சியத்தை மனஉறுதியுடன் செயல்படுத்தினால் எதிலும் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் அறிவுரை கூறினார்.
மதுரை வேலம்மாள் பொறியில் கல்லூரியில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அம்மா அறக்கட்டளை செயலர் ஆர்பி.யூ. பிரியதர்ஷனி தலைமை வகித்தார். பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்பி. உதயக்குமார் பேசியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியவர் ஜெயலலிதா. தனியாருக்கு இணையாக அரசுபள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்தி
யதால் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போதைய முதல்வரும் இளைஞர்கள், மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்குகிறார். நீங்களும் அவரைப் போன்று உழைப்பால் உயர வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டுமின்றி முதல்வர் கையால் பாராட்டு பெற வேண்டும். லட்சியத்தை மன உறுதியுடன் செயல்படுத்தினால் எதிலும் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன் ஆகியோரும் பேசினர்.
விழாவில் கும்மிபாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாடகம், நடனம், கவிதை, வில்லுப் பாட்டு போன்ற தமிழ் பாரம்பரியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் பரிசுகளும், போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முகாமில்10 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரீத்தி மருத்துவமனை இயக்குநர் சிவக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேராசியர்கள் வேம்புலு, ராஜசேகர், புவனேசுவரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.