விருதுநகர்
விருதுநகர் பள்ளியில் அஞ்சல் வார விழாவையொட்டி மாணவர்கள் 6 ஆயிரம் அஞ்சல் அட்டைகளில் கட்டுரைகள் எழுதி உறவினர்களுக்கு அனுப்பினர்.
அஞ்சலக வார விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள நோபிள் மெட்ரிக். பள்ளியில் அஞ்சலக வார விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளியின் செயலர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் அஞ்சல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் ஐடா எபனேசர் ராஜாபாய் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாலவநத்தம் அஞ்சலக துணை அஞ்சல் அலுவலர் இன்பராணி மற்றும் அஞ்சலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை குறித்து தெரிந்து கொள்ளவும், அதன் பயன் மற்றும் சிறப்பை அறியும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் மாணவர்களிடம் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா ஐந்து உறவினர்களுக்கு அஞ்சல் அட்டையில் கட்டுரைகளை எழுதி அனுப்பினர்.
அதில், மழை நீர் சேகரிப்பு, சாலை பாதுகாப்பு, தூய்மை இந்தியா, பிளாஸ்டிக் ஒழிப்பு, பசுமை ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் கடிதங்கள் எழுதினர். இவ்வாறு சுமார் 6,000 அஞ்சல் அட்டைகளில் எழுதப்பட்டு உறவினர்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன.