நம்ம ஊரு நடப்பு

பள்ளி மாணவர்களை அதிகம் ஈர்க்கும் மதுரை காந்தி மியூசியம்

செய்திப்பிரிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை காந்தி மியூசியத்தை இந்த ஆண்டு 5,08,396 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அவர்களில் 60 ஆயிரம் பேர் பள்ளிக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசத்தந்தை மகாத்மா காந்தி இறந்த பிறகு அவர் விட்டுச் சென்றபணிகளையும், அவரது சிந்னைகளை யும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்காக, நாடு முழுவதும் காந்தி அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட்டன. மதுரை காந்தி மியூசியம் 1959-ம் ஆண்டு தமிழகத்தில் காந்திக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம். நேரு தொடங்கி வைத்தார் என்ற பெருமையைக் கொண்டது.

காந்தி மியூசியம் செயல்படும் கட்டிடம் ஒரு காலத்தில் ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையாக செயல்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங் களில் ஒன்றாக உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் உபயோகப்படுத்திய பொருட்கள்உள்ளன. காந்தியடிகள் இறக்கும்போது அவர் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த மேல்துண்டு இங்கு கண்ணாடிப் பேழைக்குள் அடைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி காந்தியை கொலைசெய்யப் பயன்படுத்திய கைத் துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தையும், அவர் பயன்படுத்திய பொருட்களையும், அவரது காந்திய சிந்தனைகளையும் பார்க்க தினமும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், பள்ளிக் குழந்தைகள் வருகின்றனர். தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு என்பதால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு அதிக அளவு பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

இது குறித்து காந்தி மியூசியம் இயக்குநர் கே.ஆர்.நந்தாராவ் கூறிய தாவது:

மதுரைக்கு ஆண்டுதோறும் 1 கோடியே 58 லட்சத்து 34 ஆயிரத்து 288 சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பார்க்க வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் காந்தி மியூசியத்தைப் பார்வையிட வருகின்றனர். தற்போது காந்திய சிந்தனைகள் ஈர்ப்பால், பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் ஆர்வமாக அழைத்து வரத்தொடங்கியுள்ளனர். கடந்த 2016-2017-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2017-2018-ம் ஆண்டு காந்தி மியூசியத்துக்கு கூடுதலாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 697 சுற்றுலாப் பயணிகள் வந்தனர். 2016-2017-ம் ஆண்டு 3 லட்சத்து 24 ஆயிரத்து 763 பேர் வந்துள்ளனர். 2017-2018-ம் ஆண்டில் மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரத்து 460 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதில், 3 லட்சத்து 40 ஆயிரத்து 955 பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள். 12 ஆயிரத்து 70 பேர் வெளிநாட்டினர். 87,435 பேர் மாணவர்கள். 2018-19-ம் ஆண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 396 பேர் காந்தி மியூசித்தை பார்வையிட்டுள்ளனர். இதில், 60 ஆயிரம் பேர் பள்ளிக் குழந்தைகள், 9,142 வெளிநாட்டினர் பார்வையிட்டுள்ளனர்.

தற்போது காந்தியடிகளின் 150-வதுஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருவதால் சில மாதங்களாக வழக்கத்துக்கு மாறாகப் பள்ளிக்குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதில், பள்ளிக் குழந்தைகள் அதிகம். அவர்களி
டம் காந்திய சிந்தனைகளைப் பரப்ப, அவரது வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள், புகைப்படங்கள், காந்திய குறும்படம் அடங்கிய ‘பென் ட்ரைவர்’ சலுகை விலையில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT