த.சத்தியசீலன்
கோவை
தேசிய மாணவர் படையினருக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கோவை மாணவி எஸ்.ஆர்.கீர்த்தி.
கோவை பீளமேடு-ஆவாரம்பாளை யம் சாலையில் உள்ளது, ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி எஸ்.ஆர். கீர்த்தி, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையினருக்கு இடையிலான, அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். தேசிய மாணவர் படையின் கீழ் செயல்படும் 17 இயக்குநரகங்களில் உள்ள 106 தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழக இயக்குநரகம் சார்பில் கலந்து கொண்டு, மாணவி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
தனது சாதனை குறித்து மாணவி கீர்த்தி கூறும்போது, “ஸ்நேப்பிங், குரூப்பிங் ஆகிய இரு பிரிவுகளில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடை
பெற்றது. 'ஸ்நேப்பிங்' என்பது ஒரு விநாடிக்குள் ஒரு தோட்டாவை குறிப்பிட்ட இலக்கை நோக்கி செலுத்துவதாகும். 'குரூப்பிங்' என்பது குறிப்பிட்ட இலக்கை நோக்கி 5 தோட்டாக்களை செலுத்துவதாகும். இப்பிரிவில் கலந்து கொண்ட நான், இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றேன்.
எங்கள் பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் குமரன், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் எனக்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்து வருகிறார். காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளில் நடத்தப்பட்டு வரும் தேசிய மாணவர் படை முகாம்களில் எங்களுக்கு துப்பாக்கிகளை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சத்தியமங்கலம், திருச்செங்கோடு, கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டேன். மதுரையில் நடைபெற்ற தேசிய மாணவர் படை குழுக்களுக்கு இடையிலான போட்டியில், குரூப்பிங் பிரிவில் 1.3 செ.மீ. இலக்கை நோக்கி சுட்டேன். இதேபோல் ஸ்நேப்பிங் பிரிவில் 200-க்கு 200 புள்ளிகள் பெற்றேன்” என்றார்.
துப்பாக்கிச் சுடுதல் மட்டுமின்றி பரதநாட்டியம் ஆடுவதிலும் சிறந்தவரான, இம்மாணவி தேசிய மாணவர் கலை நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இதேபோல் பள்ளியிலும், பள்ளிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறமை காட்டி வருகிறார்.