தேனி
தேனி மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் இறங்க வேண்டாம் என்று கரையோர பகுதி மக்களுக்கு பள்ளிமாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில் உள்ளது.
அதற்கு முன்னதாகவே தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் ஆற்றின் நீர்வரத்தை கணிக்க முடியாத நிலை உள்ளது. இதை உணராமல் பலரும் வெள்ள நீரில் இறங்கி குளிப்பதுடன், விளையாடவும் செய்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேர் அண்மையில் இறந்தனர். தற்போது சோத்துப்பாறை அணை நீரும் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கரையோர மக்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர் பேரிடர் மேலாண்மை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பெரியகுளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிமாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை உதவி தலைமை ஆசிரியை சுந்தரியம்மாள் தொடங்கி வைத்தார்.
மழை பெய்யும்போது மரங்களின் அடியில் நிற்கக் கூடாது, மின்கம்பங்கள் அருகில் செல்லக் கூடாது என்று பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியவாறு பேரணியில் மாணவிகள் பங்கேற்றனர்.