அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் புரவலர் நிதி வழங்கிய திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன். அருகில் மாவட்ட கல்வி அலுவலர் ஷெர்லின் விமல். 
நம்ம ஊரு நடப்பு

தனக்கு கிடைத்த விருதுத்தொகை ரூ.1 லட்சத்தை அரசு பள்ளிகளுக்கு வழங்கிய ஊராட்சி தலைவர்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: தனக்கு கிடைத்த விருதுத்தொகையான ரூ.1 லட்சத்தை 95 அரசு பள்ளிகளுக்கு புரவலர் நிதியாக வழங்கியுள்ளார் ஊராட்சி மன்றத்தலைவர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கூட்டம், திருமருகலில் உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஷெர்லின் விமல் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திருப்புகலூர் ஊராட்சி மன்றதலைவர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘எனது ஊராட்சியில் மரக்கன்றுகளை நடுதல், நெகிழிப் பயன்பாட்டை குறைத்தல், மஞ்சள்பை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறுசுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, பசுமை சாம்பியன் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை ஆகியவற்றை நாகை மாவட்ட ஆட்சியர் எனக்கு வழங்கினார். அந்தத் தொகையை திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 95 அரசுப் பள்ளிகளுக்கும் தலா ரூ.1,000 வீதம் புரவலர் நிதியாக வழங்குகிறேன்" என்றார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன் அந்தகூட்டத்திலேயே 95 அரசுப் பள்ளி களின் தலைமை ஆசிரியர்களிடமும் தலா ரூ.1,000 வீதம் வழங்கினார்.

SCROLL FOR NEXT