இத்தாலியின் மோன்சா நகர அவை கடந்த 2004இல் ஒரு விநோதமான, சட்டத்தைக் கொண்டு வந்தது. வட்ட வடிவ மீன்தொட்டியில், மீன்களை வளர்க்கக் கூடாது.
வளைந்த கண்ணாடி வழியே, அந்த மீன்கள் பார்க்கும்போது, வெளியுலகம் சரியாகத் தெரியாது. உண்மையான காட்சி, திரிக்கப்பட்டோ அல்லது வளைக்கப்பட்டோ தெரியும். அது மீன்களுக்குச் செய்யும் கொடுமை என்பது அவர்களின் வாதம்.
‘டாம் அண்டு ஜெர்ரி’ கார்ட்டூன் தொடரில், ஒருமுறை டாம், சாலையில் நடக்கும்போது அதன் உயரத்துக்கு ஏற்ற பார்வையில், மனிதர்கள் கால்களாக மட்டுமே தெரிவார்கள்.
ஆக, யாருடைய பார்வை உண்மை? ஒரு வேளை நாமும்கூட, அந்த மீன்கள்போல ஒரு வளைந்த கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ? அப்படியானால் எதுதான் மெய்?
சாதனைக் கோட்பாடுகள்
இயற்பியல் இது போன்றதொரு விவாதத்தில் சிக்கியுள்ளது. பிரபஞ்சத்தை, ‘சார்பியல்’ கண்கொண்டு பார்க்க வேண்டுமா, ‘குவாண்டம் இயற்பிய’லின் வழியாகப் பார்க்கவேண்டுமா என்னும் குழப்பம் கடந்த ஒரு நூற்றாண் டாகவே நீடிக்கிறது.
ஏனென்றால், வளர்ச்சியடைந்த இயற்பியலில், இந்த இரண்டு பார்வைகளுமே நிரூபிக்கப்பட்டவை. ஒன்று விண்மீன்கள், கோள்கள், கருந்துளைகள் போன்ற பெரும் உலகை விளக்கும் ஐன்ஸ்டீனின் ‘சார்பியல் கோட்பாடு’. மற்றொன்று சிறிய அணு உலகை விளக்கும் ‘குவாண்டம் இயற்பியல்’.
சார்பியலை பொறுத்தவரை, பிரபஞ்சம் சீரான ‘கால-வெளி’ (Space-Time) கட்டமைப்பிலானது. அதன் மேல் கோள்களும் நட்சத்திரங்களும், நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கில் இயங்குகின்றன.
குவாண்டம் இயற்பியலோ, பிரபஞ்சத்தை ‘குவாண்டா’ என்னும் சிறுசிறு ஆற்றல் பொட்டலங்களாலும், கொந்தளிப்பான குவாண்டம் நுரை அமைப்பினாலும் (Quantum Foam) ஆனது என்கிறது.
அதேபோல, அணுத்துகள்களின் நிகழ்வுகள் நிச்சய மற்றவை, நிகழ்தகவின் (Probability) அடிப்படையில் செயல்படுபவை என்கிறது. விதிகள் வெவ்வேறாக இருந்தாலும், இந்தக் கோட்பாடுகள் தத்தமது துறைகளில் அசாத்தியத் துல்லியத்துடன் வேலை செய்கின்றன.
அண்டவியல், ஜிபிஎஸ், அணுசக்தித் துறைகளில் மாபெரும் பங்களிப்பை சார்பியலும், மின்னணுவியல், மருத்துவம், கணினித் துறைகளில் குவாண்டம் இயற்பியலும், சாதனைகள் செய்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், பிரபஞ்சத் துக்கு ஒரு பார்வை, ஒரு விதி தானே இருக்கமுடியும்?
முழுமைக் கோட்பாடு
அண்டவெளி ஆராய்ச்சியின் சில பகுதிகளில், சார்பியல், குவாண்டம் இயற்பியலின் இணைந்த பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆனால், மிகவும் வலிமையான ஈர்ப்புவிசையுடன் (Gravity) குவாண்டம் விளைவுகள் இணையும்போது, சார்பியல் கோட்பாட்டின் கணிதச் சமன்பாடுகள் சிதைந்து முடிவிலி (Infinity) எனும் பிழையான முடிவுகளைத் தருகின்றன. இந்த எல்லைக்கு மேல் ஆராய முடியாமல் இயற்பியல் திகைத்து நிற்கிறது.+
எடுத்துக்காட்டுக்கு, அண்டப் ‘பெருவெடிப்பு’ (Bigbang), அணுவைவிடச் சிறிய அளவில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. எனவே, அதன் தொடக்க நிலையை விளக்க குவாண்டம் விதிகள் தேவை. ஆனால், அந்த மிகச் சிறிய புள்ளியில், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் நிறையும் ஆற்றலும் அடங்கியிருந்ததால், அது சார்பியல் விதிகளுக்கும் உட்பட்டதாகிறது.
அதேபோலக் கருந்துளையின் மையத்தில் (Singularity), அதிக நிறையும் ஈர்ப்புவிசையும் இருப்பதால் அதை விளக்க சார்பியல் தேவைப்படுகிறது. ஆனால், அங்கே பருப்பொருள், சுருங்கி ஒரு சிறு புள்ளியைப் போல மாறிவிடுவதால், அங்கே குவாண்டம் விதிகளும் அவசியமாகின்றன. ஆக, அனைத்து விசைகளையும், அனைத்து அளவீடுகளையும் உள்ளடக்கிய ஆழமான கட்டமைப்பு இயற்பிய லுக்குத் தேவைப்படுகிறது.
பிரபஞ்சத்தின் அனைத்து விதிகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவரும் அந்த உன்னதமான இலக்கை ‘முழுமைக் கோட்பாடு’ (Theory of Everything) என இயற்பியலாளர்கள் அழைக்கிறார்கள்.
இந்த ஒற்றை விதி கிடைத்துவிட்டால், பிரபஞ்சம் எப்படித் தொடங்கியது, கருந்துளைகளின் உள்ளே என்ன நடக்கிறது என்பது போன்ற மர்மங்களுக்கு இறுதி விடை கிடைத்துவிடும்.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com