பள்ளியின் நுழைவாயிலில் உயரமான படிக்கட்டுகள். சாய்வு தளம் இல்லை. வகுப்பறை அமைந்துள்ள முதல் மாடியில் அணுகக்கூடிய கழிப்பறையும் இல்லை. ‘உங்கள் குழந்தையை இங்கே சேர்த்தால் நாங்கள் பார்த்துக்கொள்வது கடினம்’ என்கிறது பள்ளி நிர்வாகம்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியிடம்தான் குறையா? இல்லை. அனைத்துக் குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் பள்ளிச் சூழல் அமைக்கப் படாததுதான் உண்மையான குறை.
மாற்றுத்திறனுடைய குழந்தைக்குக் கல்வி, பாதுகாப்பு, அணுகுதல், சமத்துவம், மரியாதை ஆகியவை கருணையால் கிடைக்க வேண்டியவை அல்ல. அவை சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட உரிமைகள். அந்த உரிமை களுக்குப் பாதுகாப்புக் கவசமாக அமைந்துள்ள முக்கியமான சட்டம்தான் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016.
21 உரிமைகள்
முந்தைய மாற்றுத்திறனாளர் சட்டத்தில் (1995) ஏழு வகையான மாற்றுத்திறன்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருந்தன. புதிய சட்டம் மூலம் அவை 21 வகைகளாக விரிவுபடுத்தப்பட்டன.
பார்வையின்மை, குறைப்பார்வை, செவித்திறன் குறைபாடு, உடலியக்கக் குறைபாடு, உயரம் குறைவான தன்மை, அறிவுத்திறன் குறைபாடு, மனநோய், ஆட்டிசம் வரம்புக் குறைபாடு, பெருமூளை வாதம், தசைச்சிதைவு, நாள்பட்ட நரம்பியல் நிலைகள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, மல்டிபிள் ஸ்கலரோசிஸ், பேச்சு - மொழிக் குறைபாடு, தலசீமியா, ஹீமோபீலியா, அரிவாள் செல் நோய், கேட்டல் - பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல்வகை மாற்றுத்திறன், அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மாற்றுத்திறன், தொழுநோயில் இருந்து குணமடைந்தவர்கள், பார்கின்சன் நோய் ஆகியவை சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்டன.
இந்த விரிவாக்கம் வெறும் எண்ணிக்கை மாற்றம் அல்ல. இதுவரை ‘மாற்றுத்திறன்‘ என அங்கீகரிக்கப்படாமல், தேவையான ஆதரவும் வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்த பலரின் வாழ்க்கையில் திறக்கப்பட்ட உரிமைக் கதவு.
கண்ணியமான வாழ்க்கை
மாற்றுத்திறனைக் காரணம் காட்டி ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க மறுப்பது, வகுப்பறையில் தனியாக உட்கார வைப்பது, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பது, சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமல் தவிர்ப்பது போன்றவை பாகுபாடாகும். ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
குழந்தையின் மாற்றுத்திறனைக் கேலி செய்வதும், இழிவான பெயர்களால் அழைப்பதும், அவர்களின் கருத்தைக் கேட்காமல் முடிவெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குழந்தை பேச முடியாமல் இருக்கலாம்; ஆனால் அந்தக் குழந்தைக்குக் கருத்து இல்லை எனப் பொருளல்ல. அவர்களின் கருத்தைக் கேட்பது, குழந்தையின் கண்ணியத்தை மதிப்பதாகும்.
18 வரை இலவசக் கல்வி
சான்றளிக்கப்பட்டவராக, 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தையாக இருப்பின் 6 முதல் 18 வயதுவரை அருகிலுள்ள பொதுப் பள்ளியிலோ, விரும்பிய சிறப்புப் பள்ளியிலோ இலவசக் கல்வி பெறும் உரிமை உள்ளது.
மாற்றுத்திறனுடைய குழந்தையைப் பொதுப் பள்ளியில் சேர்த்துக்கொள்வது மட்டும் அவர்களுக்கான உரிமை அல்ல. பாடங்களைப் புரிந்துகொள்ளவும், நண்பர்களுடன் பழகவும், விளையாடவும், தேர்வெழுதவும், பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
பார்வையற்ற குழந்தைக்கு பிரெய்ல், ஒலிப் புத்தகம் அல்லது மின்னணு வடிவிலான பாடப்புத்தகம் தேவைப்படலாம். குறைப்
பார்வையுடைய குழந்தைக்குப் பெரிய எழுத்து, கூடுதல் வெளிச்சம் அல்லது முன் வரிசை இருக்கை உதவலாம். செவித்திறன் குறைபாடுடைய குழந்தைக்குச் சைகை மொழி, எழுத்துவழி அறிவுறுத்தல் அல்லது காட்சி அடிப்படையிலான கற்பித்தல் தேவைப்படலாம்.
ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு அமைதியான இடம், முன்கூட்டியே தெரிவிக்கப்படும் அட்டவணை, படிப்படியான வழிகாட்டுதல் போன்றவை பயனளிக்கலாம்.
கற்றல் குறை பாடுடைய குழந்தைக்குக் கூடுதல் நேரம், எளிமையான அறிவுறுத்தல், பல புலன் கற்பித்தல் முறை தேவைப்படலாம். இவை சிறப்புச் சலுகைகள் அல்ல. மற்றவர்களுக்கு இணையாகக் குழந்தைகள் கற்க உதவும் நியாயமான ஏற்பாடுகள்.
தேர்வில் ஏற்பாடுகள்
அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே முறையில் தேர்வு நடத்துவது சமத்துவம் ஆகாது. ஒவ்வொரு குழந்தையும் தன் திறனை வெளிப்படுத்த ஏற்ற வழியை உருவாக்குவதே சமத்துவம்.
கூடுதல் நேரம், எழுத்தர் உதவி வசதி, பெரிய எழுத்து வினாத்தாள், பிரெய்ல், கணினிப் பயன்பாடு, எழுத்துவழி அறிவுறுத் தல் அல்லது சைகை மொழி ஆதரவு, மாற்றி யமைக்கப்பட்ட மதிப்பீடு போன்றவை குழந் தைக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் அல்ல. மற்ற குழந்தைகளுடன் சமமான வாய்ப் பைப் பெற உதவும் நியாயமான ஏற்பாடுகள்.
அணுகக்கூடிய உலகம்
பள்ளி, மருத்துவமனை, பேருந்து, அரசு அலுவலகம், பூங்கா, நூலகம், இணையதளம் உள்ளிட்ட அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்குள் செல்ல முடியவில்லை என்றால், அங்கே வழங்கப்படும் வாய்ப்பையும் அந்த நபர் இழக்கிறார்.
அணுகல்தன்மை என்பது கட்டிடத்தை பற்றியது மட்டுமல்ல; தகவல் தொடர்பு, கல்வி, தொழில்நுட்பம், சமூக மனப்பான்மையையும் உள்ளடக்கியது.
வேலைக்கான பாதை
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 வரையறுக்கப்பட்ட அளவிலான குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடும், அரசுப் பணிகளில் நான்கு சதவீத இடஒதுக்கீடும் வழங்குகிறது.
பள்ளியில் சரியான ஆதரவைப் பெறும் குழந்தை நாளை மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர், அறிவியலாளர், கலைஞர், விளையாட்டு வீரர் அல்லது நிர்வாகியாக மாற முடியும். ஆனால், தொடக்கத்திலேயே வாய்ப்புகள் மறுக்கப் பட்டால், அந்தக் குழந்தையின் திறனுடன் சமூகத்தின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது.
மௌனம் கலையட்டும்
மாற்றுத்திறன் குழந்தைக்குப் பள்ளிச் சேர்க்கை மறுக்கப்பட்டால், நியாயமான ஏற்பாடுகள் வழங்கப்படாவிட்டால், பாகுபாடு காட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது நிறுவனத்திடம் பெற்றோர் முதலில் எழுத்துபூர்வமாக முறையிடலாம்.
அதன்பின் கல்வித் துறை அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலர், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் போன்ற அதிகாரிகளை அணுகலாம். வாய்மொழிப் புகாரைவிட எழுத்துபூர்வமான புகார் முக்கியமான ஆதாரமாக அமையும்.
நட்சத்திரங்கள் ஒளிரட்டும்!
நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே அளவில் ஒளிர்வதில்லை. சில நட்சத்திரங்கள் கண்களுக்குப் புலப்படும். உற்றுநோக்கினால் மட்டுமே சில தென்படும். எதுவாயினும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்துவமான ஒளி உண்டு.
அதுபோல ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன், கனவு, வாழ்வியல் மொழி ஆகியவை உள்ளன. அந்த ஒளியை மறைப்பது குழந்தையின் மாற்றுத்திறன் அல்ல; சமூகத்தின் முன்தீர்மானம், அணுக முடியாத சூழல்கள், வாய்ப்பின்மை, புரிதலின்மை ஆகியவையே.
இந்தக் குழந்தைகளைப் பற்றிய நமது அக்கறை, உரையாடல், பொறுப்பு தொடர வேண்டும். அவர்களைப் புரிந்துகொள்வோம். அவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம். உரிமைகளை மதிப்போம். தடைகளை அகற்றுவோம்.
வாய்ப்புகளை உருவாக்குவோம். அவர்களுக்காக முடிவெடுப்பதைவிட, அவர்க ளுடன் இணைந்து பயணிப்போம். ஒவ்வொரு குழந்தையும் தன் முழு ஒளியுடன் வாழட்டும்.
(நிறைவடைந்தது)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com