ஒரு நாள் மாலை வேளை. எங்கள் குடியிருப்புப் பகுதி நலச்சங்கத்தின் செயலர் அழைத்தார். "சார், அவசரம். பக்கத்துத் தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு வர முடியுமா?" என்றார். என்னவென்று தெரியாமல் விரைந்து சென்றேன். அந்த வீட்டிலும் வெளியேயும் கூட்டம். உள்ளே சென்றேன்.
அங்கிருந்த சிறுவனுக்கு 15, 16 வயதிருக் கலாம். செயலர், “சார், இந்த வீட்டில் திருடிட்டான். எதுவுமே சொல்லாமல் கல்லுளி மங்கனா நிக்கிறான். அதான் உங்களைக் கூப்பிட்டேன். ஏதாவது உரைக்கிற மாதிரி சொல்லுங்க” என்றார். சுற்றிலும் பார்த்தேன்.
காரணங்களும் நீதிகளும் சொல்லிக்கொண்டே இருக்கும் பெரியவர்கள். சொல்லம்புகளால் இறுகிய முகத்துடன் சிறுவன், கண்ணீரோடு கூனிக் குறுகிய அவனுடைய தாய்.
விழுந்தது அறை
அந்தச் சிறுவனிடம் 'என்ன கேட்பது?' என்கிற இக்கட்டான நிலை எனக்கு. எந்தப் பள்ளி, இவன் வீடு எங்கே என்று செயலரிடமே கேட்டேன். வேகமாகப் பதில்கள் வந்தன. அப்போது ஒருவரின் வாயிலிருந்து சரமாரி யாகக் கெட்ட வார்த்தைகள். அவரைப் பார்த்ததும் அந்த அம்மா கதறினார்.
கெட்ட வார்த்தை கூறியவர் பையனின் அப்பா என்பது புரிந்தது. சிறுவனின் முகத்தில் பயம். “ஏண்டா, மாட்டிக்கிடாம எடுக்கத் தெரியல” என்று அவன் முகத்தில் ஓர் அறைவிட்டார் அப்பா.
என் முகத்திலும் அறை விழுந்ததாக உணர்ந்தேன். அங்கிருந்த பலரும் அப்படியே உணர்ந்திருப்பர். அமைதி சூழ்ந்தது. அப்பா, மகனை இழுத்துக் கொண்டு வெளியேறினார். அந்தப் பையன் எடுத்தது, சில ஜீன்ஸ் பேண்ட்களும் பனியன் களும்.
யாருக்காக ஓடுகிறோம்?
ஆசிரியர்களோடு இன்றைய பெற்றோர் குறித்துக் கலந்துரையாடும் போது வேதனையோடு நிறையப் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களில் தனிப்பெற்றோர் அதிகம்.
பிரிந்து வாழ்வது, வேறு துணை தேடிப் போய் விடுவது, போதைப்பழக்கம், ஆசிரியரிடம் விதண்டாவாதமாகப் பேசுவது, குழந்தை களுடன் பேசுவதே இல்லை, ஓர் அறை வீடுகள், பிள்ளைகளைக் கண்டிக்காமல் தவறுகளுக்குத் துணை போவது என ஏராளமான வற்றை வருத்தத்தோடு சொல்வார்கள்.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இதே நிலைதான். வறுமையில் வாழ்பவர்கள் அடிப்படைத் தேவைகளுக்காகக் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல். நடுத்தர வர்க்கத் தில் பொருளாதாரப் பெருமையை உயர்த்த வேண்டிய பரபரப்பு என எல்லாருக்கும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்வு. அதனால் யாருக்கும் குழந்தைகளைக் கவனிக்க நேரமில்லை.
‘குடும்பத்தின் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்வுக்காக' இவ்வளவு கஷ்டமும் என்று பலரும் காரணம் சொல்கிறார்கள். எது வேண்டுமோ அதைச் சிதைத்துவிட்டு ஓடுவதுதான் வாழ்க்கையா? பணியிடச் சிரமங்களால் எழும் இயலாமை, சினம் ஆகிய எல்லாம் செல்லுமிடம் குடும்பம். செல்லுமிடத்துச் சினமெல்லாம் சேரும் இடம், குழந்தைகள். குடும்ப வன்முறை, சொல்லிலும் செயலிலும் அதிகரித்து வருகிறது.
கேட்ட வார்த்தை... பார்த்த வாழ்வு...
ஆசிரியர்களிடையே பேசும்போது, “குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவ தில்லை...” என்று கூறி நிறுத்துவேன். உடனே, “கேட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள்” என்று பலரும் சொல்வார்கள்.
குழந்தைகள் கேட்கும்படி கெட்ட வார்த்தைகளைப் பேசு பவர்களை என்ன செய்வது? குழந்தைகள் பார்க்கும்படித் தவறான செயல்களைச் செய்ப வர்களை என்ன செய்வது? வளர்ந்த பிறகு நாமும் செய்யலாம் என்கிற எண்ணத்தைக் குழந்தைகள் மனத்தில் நம் செயல்களால் பதிக்கிறோம். நம்மை அவர்கள் மீறும்போது செய்வது அறியாது தவிக்கிறோம்.
குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும் எனச் சொல்கிறோம். பெரியவர்கள் நேரத்தைச் செலவழிக்கும்போது குழந்தை களைச் சேர்த்துக் கொள்கிறோம். நாம் செல்லும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்கிறோம். நாம் பார்க்கும் திரைப்படங்களுக்குக் குழந்தைகளோடு செல்கிறோம்.
வன்முறை மட்டுமே நிறைந்த படங்களை பெற்றோருடன் பிள்ளைகளும் பார்த்துக் கைதட்டிக் கூக்குரலிட்டு ரசிக்கிறார்கள்.
திரைப்படங்களில் சாதாரணமாகக் காட்டப்படும் வன்முறைக் காட்சியைப் போல ஹரியாணாவில் ஆறு வயதுப் பெண் குழந்தையைக் கடுமையாகத் தாக்கிய எட்டு வயதுக் குழந்தை எங்கிருந்து அதைக் கற்றது?
வாழ்க்கை முன்னுதாரணம்
‘அப்துல் கலாமைப் பார்! அண்ணா துரையைப் பார்!' என்று குழந்தைகள் வாழ்க்கையில் பார்த்திராத பலரைத்தான் முன்னு தாரணமாகக் காட்டுகிறோம்.
குடும்பத் தலைவர் என்கிற பதவியில் அப்பாக்கள் செயலில் காட்டும் வாழ்க்கை முறையைத்தானே பிள்ளைகள் பிரதிபலிக்கிறார்கள்.
கல்வியால், பொருளாதாரத்தால் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், ஆணா திக்கம் குறைந்திருக்கிறதா? ஒருவகையில் அது அதிகார போதை. அதனால்தானே பதவிகள் பொறுப்புகளாக மாறாமல், அதிகார மாக மாறி அடிமைகளை உருவாக்க விரும்புகின்றன.
‘சில்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தில் ஒரு காட்சி. அப்பா சர்க்கரைக் கட்டிகளை உடைத்துக்கொண்டு இருப்பார். அம்மாவிடம் தேநீர் கேட்பார். அம்மா, “சர்க்கரை இல்லை, கடைக்குப் போய் வாங்கி வா” என்று மகனிடம் சொல்வார்.
“இதோ சர்க்கரை இருக்கிறதே” என்று அந்தச் சிறுவன் கூறுவான். அப்பா சொல்வார், “இது நம்முடையது அல்ல.” குழந்தைகளுக்குத் தேவை இது போன்ற காட்சிகள்தான்.
குழந்தைகளோடு பழகுவோம்
ஊடகங்கள், 'கொண்டாட்டமான' கற்பனை வாழ்வைக் காட்டுகின்றன. குழந்தைகளின் பாதை மாறுகிறது. குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது என்பது அவர்களின் உலகில் நாம் இருப்பது.
அவர்கள் பார்க்கும் 'சின்சான், நருட்டோ' ஆகியவற்றை அவர்களோடு பார்ப்பது. அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு அவர்கள் அறியாமல் அழைத்துச் செல்வதே அறம் பழக்கும் வழி.
(தொடர்ந்து பேசுவோம்!)
- தொடர்புக்கு: artsiva13@gmail.com