ஆறு வயதான குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கல்விக் கொள்கை 2020,அடிப்படை கல்வி நிலையில் குழந்தைகளின் கற்றலை பரிந்துரைக்க முன்னுரிமை அளித்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அடிப்படை கல்வி நிலை என்பது குழந்தைகளுக்கு 5 ஆண்டு கற்றலை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 3 வயதுக்கும் 8 வயதுக்கும் இடையே இந்த நிலை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் 2 ஆண்டுகள் அடிப்படை நிலை -1 மற்றும் நிலை -2 கல்வியும் அடங்கும்.
அங்கன்வாடிகள், அரசு, அரசு உதவி பெறும் மையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மழலையர் மையங்கள் ஆகியவற்றில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான மழலையர் கல்வியை 3 ஆண்டுகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அடிப்படை கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சிறப்பாக அமைய, பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேவை.
இந்த தொலைநோக்குப் பார்வையைஎட்ட கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைபிப்ரவரி 9-ம் தேதி அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன்பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் பள்ளிக் கல்வியில்நிலை-1க்கான மாணவர் சேர்க்கை வயதை 6-க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டுபட்டயப்படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம்,மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்டகல்வி மற்றும்பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறை: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதாக இருந்தால் அந்த ஆண்டில் ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 5 வயதுக்கு ஒரு மாதம் குறைவாக இருப்பின் வட்டார கல்வி அலுவலரிடமும், 2 மாதங்கள் குறைவாக இருந்தால் மாவட்ட கல்வி அதிகாரியிடமும், 3 மாதங்கள் இருப்பின் தொடக்கக் கல்வி இயக்குநரிடமும் சிறப்பு அனுமதி பெற்று ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்.
அந்த வகையில் ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கு 6 வயது ஆகியிருக்க வேண்டும் என்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுரை தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவு ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 6 வயதை காட்டிலும் குறைந்த வயது நடைமுறையில் இருந்து வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர தமிழ்நாட்டுக்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழுவில் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், ஓய்வு பெற்ற கணிதவியல் பேராசிரியர் இராமானுஜம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு இந்த ஆண்டு இறுதிக்குள் கல்விக் கொள்கையை வடிவமைத்து வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.