நடப்புகள்

எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி டிச.15-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3-ம் பருவத்திற்கான பயிற்சி டிச.15-ல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பொருளை உருவாக்கி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கியது.

இதைத் தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எண்ணும் எழுத்தும் சார்ந்து 3-ம் பருவ பயிற்சிக்கான பணியை முடித்துள்ளது.

இதையடுத்து 1 முதல் 3-ம்வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்து 3-ம் பருவத்திற்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள பில்லர் பயிற்சி மையத்தில் டிச. 15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி டிச.19 முதல் 21-ம் தேதி வரையிலும் ஒன்றிய அளவிலான பயிற்சி அடுத்தாண்டு ஜன.2 முதல் 4-ம் தேதி வரை நடத்த வேண்டும்.

SCROLL FOR NEXT