நடப்புகள்

தமிழகத்தில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் உயர் கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

''தமிழகத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சீரான உயர் கல்வி வழங்குவதற்கும்‌, மாணவர்‌ சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்‌, 10 புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளைத்‌ தொடங்குவதற்கும் வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்காணும்‌ இடங்களில்‌ புதிய கல்லூரிகள்‌ தொடங்கப்படும்.

விருதுநகர்‌ மாவட்டம்‌ - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ - திருக்கோயிலூர்‌, ஈரோடு மாவட்டம்‌ - தாளவாடி, திண்டுக்கல்‌ மாவட்டம்‌ - ஒட்டன்சத்திரம்‌, திருநெல்வேலி மாவட்டம்‌ - மானூர்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌ - தாராபுரம்‌, தருமபுரி மாவட்டம்‌ - ஏரியூர்‌, புதுக்கோட்டை மாவட்டம்‌ - ஆலங்குடி, வேலூர்‌ மாவட்டம்‌ - சேர்க்காடு ஆகிய இடங்களில்‌ புதிய இருபாலர்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளும்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌ - கூத்தாநல்லூரில்‌ புதிய அரசு மகளிர்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியும்‌ தொடங்கப்படும்''.

இவ்வாறு உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது‌.

SCROLL FOR NEXT