நடப்புகள்

ஆப்கன் மாணவர்கள் கல்லூரிக்கே திரும்பலாம்: மும்பை ஐஐடி அறிவிப்பு

பிடிஐ

மும்பை ஐஐடியில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள் மீண்டும் தங்கள் வளாகத்துக்கே திரும்பலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியபின், ஆப்கன் அரசுப் படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஏராளமான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் உள்ள 34 மாகணங்களில் முக்கியமான 15-க்கும் மேற்பட்ட மாகாணங்களைத் தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

தலைநகர் காபூல் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அதிபர் மாளிகையைக் கையகப்படுத்திய தலிபான்கள் அங்கு குழுமியுள்ளனர்.

காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தலிபான்களிடம் சிக்கிக் கொள்வதைவிட, வேறு ஏதாவது நாட்டுக்குத் தப்பிவிடலாம் என மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை ஐஐடியில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள் மீண்டும் தங்கள் வளாகத்துக்கே திரும்பலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பை ஐஐடி இயக்குநர் சுபாஷிஸ் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டு ஆப்கனில் இருந்து முதுகலைப் படிப்பில் சேர மாணவர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தோம். கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் அனைவரும் ஆப்கனில் உள்ள வீடுகளில் இருந்தே தங்களின் படிப்பைத் தொடர்ந்து வந்தனர்.

காபூல் விமான நிலையத்தில் மக்கள் திரண்டு நின்ற காட்சி

எனினும் அவர்களின் தாய்நாட்டில் திடீரென ஏற்பட்ட அபாயச் சூழல் காரணமாக, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். மும்பை ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கவும் விரும்புகின்றனர். நிலைமையைப் புரிந்துகொண்டு, அவர்கள் மீண்டும் மும்பை ஐஐடி திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. ஆப்கன் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் விரைவில் கல்லூரிக்குத் திரும்புவார்கள் என்றும் நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐசிசிஆர்) சார்பில் ஆப்கன் மாணவர்கள், மும்பை ஐஐடியில் எம்.டெக். படிப்பில் சேர்ந்து படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT