புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் தந்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மூன்று பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த பரத், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் நிதியை தனது சொந்தப் பணத்தில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் இன்று வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் கூறும்போது, ''புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாகவும், கல்லூரிகளில் விண்ணப்பம் தருவது தொடர்பாகவும் நாளை கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம். புதுச்சேரியில் இம்மாதத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என்றாலும் முன்னதாகப் பள்ளியைத் தூய்மை செய்து குழந்தைகள் பாடம் படிக்க ஏற்ற வகையில் வகுப்பறையை உருவாக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலமாக வகுப்பறைகள் பூட்டியிருந்தன. பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவேண்டியது தொடர்பாகவும் நாளை முடிவு எடுப்போம்.
தமிழகத்தை போல் புதுச்சேரியில் போலீஸாருக்கு வார விடுப்பு தருவது பற்றி முதல்வர், உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கவேண்டும்" என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.