கடந்த ஆண்டு பிளஸ் 1-ல் இடை நின்ற மாணவர்களும் பிளஸ் 2-வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த குளறுபடியால் கல்வித்துறைக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினர். ஆனால் பிளஸ் 1 தேர்வில் கடைசி நாளில் நடக்கவிருந்த வேதியியல், வணிக வியல் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. இதையடுத்து அந்தத் தேர்வுகளுக்கு காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இதனால் பிளஸ் 1-ல் காலாண்டு அல்லது அரையாண்டுக்குப் பின் பள்ளிக்கு வராமல் இடைநின்றாலும் வேதியியல் பாடம் உள்ள அறிவியல் பாடப்பிரிவு, வணிகவியல் பாடம் உள்ள கலை பாடப்பிரிவு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
மேலும் அவர்கள் ஒரு தேர்வுகூட எழுதாவிட்டாலும், ஒரு பாடத்தில் மதிப்பெண் கிடைத்ததால், அரசு அறிவித்த சலுகைப்படி பிளஸ் 1-ல் தேர்ச்சியும் பெற்றனர். அதேபோல் இந்தாண்டும் கரோனா ஊரடங்கால் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும்தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம், பிளஸ் 1-ல் எழுத்துத் தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2-ல் செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் குறைந்தது 35 மதிப்பெண்கள் கொடுத்து தேர்ச்சி அளிக்கப்பட்டனர்.
அதன்படி கடந்த ஆண்டு பிளஸ் 1-ல் வேதியியல் பாடம் உள்ள அறிவியல் பாடப்பிரிவு, வணிகவியல் பாடம் உள்ள கலை பாடப்பிரிவு படித்து இடைநின்ற மாணவர்கள் பிளஸ் 2-விலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் குளறுபடியால் கல்வித்துறையில் புது பிரச்சினை எழுந்துள்ளது.
இது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பிளஸ் 1-ல் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்வு எழுதியிருந்தாலே, அவர்களது பெயர் பட்டியல் பிளஸ் 2-வுக்குச் சென்று விடுகிறது. அதனடிப்படையில் வேதி யியல் பாடம் உள்ள அறிவியல் பாடப்பிரிவு, வணிகவியல் பாடம் உள்ள கலைப்பிரிவைச் சேர்ந்த இடைநின்ற மாணவர்கள் பிளஸ் 2-வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் பிளஸ் 1-ல் வேளாண்மை, பொறியியல் பாடப்பிரிவுகளில் படித்து இடைநின்ற மாணவர்கள் ஒரு தேர்வுகூட எழுதாததால் மதிப் பெண்கள் வழங்க முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் தங்க ளையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வரு கின்றனர், என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், ‘இது குறித்து தேர்வுகள் துறை இயக்கு நருக்கு தெரிவிக்கப்படும்,’ என்றார்.