பிளஸ் 2 தேர்வு குறித்து அரசு எடுக்கும் முடிவால் மாணவர்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் கவனமாக உள்ளார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று மாலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி முறையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது.
அதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
''12-ம் வகுப்புத் தேர்வு குறித்து உடனடியாக எதையும் அறிவித்துவிட முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில் அந்த மதிப்பெண்களை வைத்துத்தான் மாணவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சி உள்ளது. இதனால்தான் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால்தான் முடிவை அறிவிக்கத் தாமதமாகிறது. பிற மாநிலங்கள் பொதுத் தேர்வை எப்படிக் கையாள்கின்றன என்பதையும் கவனத்துடன் ஆராய்ந்து வருகிறோம்.
மாணவர்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படக் கூடாது
தேர்வை நடத்தாமல் போனால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி உள்ளது. அரசு எடுக்கும் முடிவால் மாணவர்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் கவனமாக உள்ளார். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒவ்வொரு மாதிரியான கருத்துகள் வந்துள்ளன. திடீரென நீட் தேர்வு நடைபெற்றால் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்ற கருத்து எழுந்துள்ளது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறோம். ஏனெனில் ரசிக்க வேண்டிய குழந்தைப் பருவக் காலகட்டத்தில், அவர்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பதால் எதிர்க்கிறோம்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.