கல்விக்கான பட்ஜெட்டை அதிகரிக்கக் கோரி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி மத்திய அரசுக்கு ஆன்லைன் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி பந்தனா. இவர் கடந்த ஓராண்டாக கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கான பட்ஜெட்டை, மொத்த ஜிடிபியில் 6 சதவீதமாக அதிகரிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். பந்தனா Change.org என்ற ஆன்லைன் பிரச்சாரத் தளம் மூலம், வேண்டுகோளை முன்வைத்து வருகிறார். இதற்கு ஆதரவாக 73 ஆயிரம் கையெழுத்துகள் இதுவரை ஆன்லைனில் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து பந்தனா தன்னுடைய மனுவில் கூறியிருப்பதாவது:
''கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009-ன் படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டாயம் என்று கூறுகிறது. இதை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கட்டாயம் என மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும்.
கல்வி ஒவ்வொரு சிறுமியின் வருங்காலத்துக்கும் முக்கியமானது. ஆர்டிஇ சட்டத்தை மேல்நிலைக் கல்வி வரை நீட்டித்தால் மட்டுமே அனைத்துப் பெண்களுக்கும் கல்வி உறுதியாகும்.
இதற்காக மத்திய அரசு கல்விக்கான பட்ஜெட்டை, மொத்த ஜிடிபியில் 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் கிராமங்களுக்கும் மேல்நிலைப் பள்ளிகள் கிடைப்பது சாத்தியமாகும். கரோனா பெருந்தொற்றால் கற்றல் இழப்பைச் சந்தித்துள்ள என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறுமிகளின் கல்வி வருங்காலத்தில் உறுதிப்படுத்தப்படும்''.
இவ்வாறு சிறுமி பந்தனா தெரிவித்துள்ளார்.
2021- 22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பு பிப்ரவரி 1-ம் தேதி வெளியாக உள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2029-20ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பில் 3.1 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.