நடப்புகள்

ஐஐடி சென்னைக்கு சிறந்த படைப்பாற்றல் நிறுவன விருது: இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு அறிவிப்பு

செய்திப்பிரிவு

2019- 20ஆம் ஆண்டின் சிறந்த படைப்பாற்றல் கொண்ட நிறுவனம் ஐஐடி சென்னை என்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மெய்நிகர் முறையில் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நடத்தின. இதன் நிறைவு விழா டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், ஐஐடி சென்னைக்கு 2019- 20ஆம் ஆண்டின் சிறந்த படைப்பாற்றல் கொண்ட நிறுவனம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி சென்னை உருவாக்கிய அணிந்துகொள்ளக் கூடிய சுகாதாரக் கண்காணிப்புக் கருவி (VITALSENS- இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை, ரத்த ஆக்ஸிஜன் செறிவு அளவு (SpO2) மற்றும் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கருவி), நிற்கக் கூடிய வகையிலான சக்கர நாற்காலி (Arise- standing wheelchair) மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர் (Shakti- indigenous microprocessor) ஆகிய கண்டுபிடிப்புகளுக்காக இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் அஷூதோஸ் சர்மா கூறும்போது, ''கடந்த 60 ஆண்டுகளில் இருந்ததைக் காட்டிலும் இந்த 6 ஆண்டுகளில் அதிக அளவிலான புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஐஐடி சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இத்தகைய விருதுகள், கல்வி நிறுவனங்களில் நிகழும் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்திய நிறுவனங்களின் அடல் தரவரிசைப் பட்டியல் (ARIIA) சார்பில் 2019-20ஆம் ஆண்டுக்கான தேசத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்பு நிறுவனம் என்ற விருதை ஐஐடி சென்னை பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT