நடப்புகள்

5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறாது; புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

செய்திப்பிரிவு

புதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் அமல்படுத்துமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வைஃபை வசதி பயன்படுத்தப்படுகிறது. அதைக் கொண்டு, அரசு வழங்கிய மடிக்கணினியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கொடுக்கிறோம். க்யூஆர் கோட் மூலம் செல்பேசிகளிலும் பாடங்களைத் தரவிறக்கம் செய்து கொடுக்கிறோம்.

விரைவிலேயே 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகே நமது கொள்கை அம்சங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிடுவார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு கால அவகாசம் எதுவும் விதிக்கவில்லை. மாநில அரசு இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்.

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையைக் குறுகிய காலத்தில் வாபஸ் பெற்றோம். அதே நிலைப்பாட்டில்தான் உள்ளோம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT