நடப்புகள்

கோவிட்-19 வைரஸ் பாதிப்பை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு சோப்பு வழங்க திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு சோப்பு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு(சிஐஐ) சார்பில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு தொடர்பான கருத்தரங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார்விடுதியில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘‘ஒரு நாடு மேம்பட தொழில் வளர வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும். அதன்படி தமிழகத்தில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசுகவனம் செலுத்தி வருகிறது’’என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 221 விளையாட்டு வீரர்களின் பட்டியல் சிஐஐ-க்கு தரப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஒருவாரத்தில் தெரிவிக்கிறேன். ஊராட்சி மூலம் நடைபெறும் பள்ளிகளில்தான் விளையாட்டு மைதானம் குறைவாக உள்ளது.

அதனால் ஊராட்சிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பள்ளிக்கு மைதானம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளில் விடுமுறை நாட்களில்தான் பயன்படுத்தப்படுகின்றனர். மேலும், காவல் துறையினர் 365 நாட்களும் பணிபுரிகின்றனர். ஆனால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 210 நாட்கள்தான் வேலை செய்கின்றனர்.

கோவிட்-19 வைரஸ் தொடர்பாக மாணவர்களுக்கு காலைவழிப்பாட்டுக் கூட்டம் நடைபெறும்போது அறிவுரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களும் நேரில் சென்று மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கை கழுவுவதற்கான தண் ணீர் பிரச்சினை இல்லை. அதேபோல, சோப்புஉள்ளிட்ட பொருட்களை மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வழங்கவும்முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

SCROLL FOR NEXT