நடப்புகள்

கரோனா: சவுதி பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை

செய்திப்பிரிவு

உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல் விடுத்து வரும் கரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்திருப்பதை அடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாநிலத்தில் உள்ள வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரஸால் இதுவரை 3,400 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் 58 ஆயிரத்து 600 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. 19 ஆயிரத்து 16 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால், பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சவுதி அரேபியா, தனது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கட்கிழமையில் (இன்று) இருந்து விடுமுறை அளித்துள்ளது.

அனைத்து விதமான அரசு, தனியார் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கதிஃப் பிராந்தியம் மூடப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி பயில்பவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களைத் தீர்க்க நிபுணர் குழு ஒன்றையும் சவுதி அமைச்சகம் அமைத்துள்ளது.

SCROLL FOR NEXT