பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூரில், பழங்கால விளையாட்டுகளை மீட்டெடுத்து வருகிறது அரசு உயர்நிலைப் பள்ளி.
பழங்கால விளையாட்டுகள்
தொழில்நுட்ப வளர்ச்சி, மாறி வரும் நாகரீகம் உள்ளிட்டவை தமிழ் மரபு சார்ந்த விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்கின்றன. பல்லாங்குழி,கண்ணாமூச்சி, ராஜா ராணி, பரமபதம், பம்பரம் போன்ற பழங்கால விளையாட்டுகள் மறந்து கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறது இன்றைய தலைமுறை. நாளைய தலைமுறையினரோ இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, உடல் உழைப்பே இல்லாமல் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
கடந்த காலங்களில் விடுமுறைநாட்களையும், மாலைப்பொழுதுகளையும் விளையாடியே கழித்த குழந்தைகளை இப்போது பார்க்க முடிவதில்லை. அப்போது ஓடி, ஆடி விளையாடியதால், குழந்தைகளுக்கு உடல் உழைப்பு இருந்தது. அதனால் நோய் பாதிப்பு குறைந்து காணப்பட்டது. ஆனால், கணினி வளர்ச்சி, குழந்தைகளை நான்கு சுவருக்குள் முடக்கிவிட்டதால், அவர்களின் உடல் ஆரோக்கியம் இன்று குறைந்து காணப்படுகிறது. இதனால், மரபு விளையாட்டுகளை மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பழங்கால விளையாட்டு திருவிழா நடைபெற்றது. பறை இசை, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், வள்ளி கும்மி ஆகியவற்றுடன் தொடங்கிய இந்த திருவிழாவில், ராஜா ராணி, நுங்கு வண்டி ஓட்டுதல், பம்பரம், கண்ணா மூச்சி, கயிறு இழுத்தல், பாண்டியன் குழி, பன்னாங்கல், தாயம், பூச்சூடவா, சம்பா, ஓட்டங்கரம், கில்லி, டயர் வண்டி ஓட்டுதல், பச்சக்குதிரை, நொண்டி அடித்தல் உள்ளிட்ட பழங்கால விளையாட்டுகளை மாணவ, மாணவியர் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
குழு உணர்வை வளர்க்கும்
இதுகுறித்து பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாலமுருகன் கூறும்போது, "கடந்த 6 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் பழங்கால விளையாட்டு திருவிழா நடத்தி வருகிறோம். பாரம்பரியமிக்க விளையாட்டுகள் மாணவர்களின் கற்பனைத் திறன், சிந்திக்கும் ஆற்றல், ஞாபக சக்தி, கூர்நோக்கும்திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்குஉதவுகின்றன.
உதாரணமாக கபடி, பச்சக்குதிரை ஆகியன மாணவர்களிடம் தன்னம்பிக்கை, குழுவாகச் செயல்படுதல், விடாமுயற்சி, மனவலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும். மேலும், ஆசிரியர், மாணவர் இடையே புரிதல்ஏற்பட்டு, இருவருக்கும் இடையிலானஇடைவெளியைக் குறைக்க உதவுகிறது. மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது" என்றார்.