கரும்பலகையில் ‘காகம் தா... தண்ணீர் குடித்தது’ என ஆசிரி யர் எழுதும்போது, மாணவர்கள் முழுச் சொல்லைப் பார்க்காமலேயே ‘தாகத்தால்’ என ஊகித்து வாசிக்கிறார்கள். இதில் மாணவர்கள் ஒவ்வோர் எழுத்தை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை; சூழல், பொருள், முன் அனுபவத்தின் அடிப்படையில் சரியான சொல்லைக் கணிக்கிறார்கள்.
திறமையான மாணவர் எழுத்துகளைக் கடினமாகப் புரிந்து கொள்வதில்லை, மாறாக உரையை மாதிரியாக எடுத்து, சூழலில் இருந்து பொருளைக் கணித்து உருவாக்குகிறார். இதை, ‘உளமொழி யியல் ஊகித்தல் விளையாட்டு' எனக் கல்வியாளர் கென்குட்மான் அழைக்கிறார்.
இந்தக் கற்பித்தல் முறையில் குழந்தைகளிடம் செழுமையான கதை களை ஆசிரியர்கள் சொல்லும்போது, படங்களையும் சூழலையும் கொண்டு அறிமுகமில்லாத வார்த்தைகளை அவர்களையே ஊகிக்க வைக்கிறார்கள்.
எழுத்துகள், ஒலிகளின் சலிப்பூட்டும் நுட்பங்களைக் கொண்டு மாணவர்களைத் திணற அடிப்பதில்லை. ஏனெனில், அதுஅர்த்தத்தையும் வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் அழித்துவிடும் எனக் கருதுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் வாசித்தல் என்பது ஒவ்வோர் எழுத்தையும் ஒலியையும் தனித்தனியாக வாசிப்பது அல்ல.
இதற்கு முன்பு தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை, மொழியை முழுமையான அர்த்தமுள்ள அனுபவமாகக் கற்றுக் கொடுக்கச் சொன்னது. குழந் தைகள் இயல்பாகப் பேசக் கற்றுக் கொள்வதுபோலவே படித்தல், எழுது தலையும் அர்த்தமுள்ள செயல்பாடு களின் மூலம் கற்றுக் கொள்வார்கள் என்பதே இதன் அடிப் படை.
முழு மொழியின் தாக்கம்
இன்றைய வகுப்பறையில் முழு மொழி அணுகுமுறையின் தாக்கம் பல வகைகளில் காணப்படுகிறது. புத்தக வாசிப்பு நேரம் உள்ளது. இந்தப் பாடவேளையில் நாள்தோறும் ஆசிரியர் கதைகளை வாசித்து மாணவர்க ளுடன் விவாதிக்கிறார்.
மாணவர்கள் தங்கள் அனுபவங்களை எழுத ஊக்கு விக்கப்படுகிறார்கள். சுவர் அட்டைகள், சொல் அட்டைகள் முதலானவை மூலம் வகுப்பறை அச்சு எழுத்துச் சூழல் (Print-rich Classroom) பேணப்படுகிறது.
மாணவர்களின் எழுத்துப்படைப்புகள் தொங்க விடப்படுகின்றன. மாணவர் இதழ்களான ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ இதழ்கள், மாணவர் படைப்புகளை வெளியிடுகின்றன. நாடகம், குழு விவாதம், திட்டப் பணிகள் மூலம் மொழிப்பயன்பாடு இயல்பாக்கப்படுகிறது. மாணவர் களின் வாசிப்பு, எழுதுதல், பேச்சு ஆகியவை தொடர்ந்து மதிப்பிடப்படு கின்றன.
ஆனாலும், நெடுங்காலமாக, ‘வாசிப்பு என்பது பேசுவதைப் போன் றது' என்கிற முற்றிலும் தவறான புரிதல் நிலவுகிறது. பள்ளி முடிந்த பின்பு வீட்டில் பெரியவர்கள் காட்டும் கவனத்தின் மூலம் வாசிப்புக் குறியீட்டைக் கற்றுக்கொள்ளக் குழந்தைகளுக்கு வாய்ப்புள்ளது.
பெற்றோர் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பள்ளி மட்டுமே எழுத்து மொழியுட னான ஒரே அறிமுகமாக இருக்கிறது. அதிலும் முதல் அல்லது இரண்டாம் தலைமுறைக் கற்பவர்கள், அந்தக் குறியீட்டைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவு.
சமநிலை அணுகுமுறை
அண்மைக் கால எழுத்தறிவு ஆய்வுகள், ஊகித்தல் மட்டும் போதாது என்றும், ஒலியியல் (Phonics), ஒலியுணர்வு (Phonemic Awareness), சொற்களைத் துல்லியமாக அடையாளம் காணுதல் (Word Recognition) ஆகிய திறன் களும் அவசியம் எனச் சுட்டிக் காட்டுகின்றன.
எனவே, இன் றைய வகுப்பறைகளில் பொருள் சார்ந்த வாசிப்பும், முறையான ஒலியியல் கற்பித்தலும் இணைந்த சமநிலை அணுகுமுறையே அதிகம் பின்பற்றப்படுகிறது.
அர்த்தமுள்ள வாசிப்பு நடைமுறைகளுடன் முறையான, வெளிப்படையான ஒலியியல் (systematic explicit phonics) கற்பித்தலையும் இணைப் பதே தொடக்க நிலை வாசிப்பை வளர்த்தெடுக்க உதவும் என்கிறார் கல்வியாளர் மேரி கிளேயின். பல கல்வி அமைப்புகள் இன்று இவ்விரண்டையும் இணைத்த சமநிலை அணுகுமுறையைப் பின்பற்று கின்றன.
அர்த்தமுள்ள புதிய முயற்சி
அந்த வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆண்டு உருவாக்கிய தமிழ் மொழிப் பாடத்திட்டம் அர்த்தமுள்ள வாசிப்பு எனும் கருத்தைக் கைவிடாமல், குறியீடு களைத் தெளிவாகவும் முறையாகவும் தொடக்கத்திலேயே கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சியாக வெளிப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் ‘பறவை மரத்தில் அமர்ந்தது’ எனும் வாக்கியத்தை வாசிக்கும்போது ‘பறவை’ என்கிற சொல்லில் தடுமாறி னால், ஆசிரியர் எழுத்து–ஒலி குறிப்பு களைக் கவனிக்கச் சொல்வார்.
படத்தின் உதவியைப் பயன்படுத்தச் சொல்வார். வாக்கியத்தின் பொருளை யோசிக்க வழிகாட்டுவார். முழு வாக்கியத்தையும் மீண்டும் வாசிக்க வைப்பார்.
இதன் மூலம் ஒலி, பொருள், இலக்கணம், காட்சிக் குறிப்பு ஆகிய அனைத்தையும் இணைத்துச் சரியான சொல்லை அடையாளம் காணக் குழந்தை கற்றுக்கொள்ளும். ஒலிகளுக்கான குறியீடுகளாக எழுத்துகளைக் கற்பது ஒரு வழிமுறை, அதேநேரம் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதே இறுதி இலக்கு.
- கட்டுரையாளர் : ஆசிரியர், சிறார் எழுத்தாளர்; saran.hm@gmail.com