மாணவர்களிடத்தில் ஒழுக்கம், நாட்டுப் பற்று, தலைமைப் பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தேசிய மாணவர் படை (என்சிசி). இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தச் சீருடை அமைப்பின் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
ராணுவத்தில் நிலவிய ஆள் பற்றாக் குறையைக் களைய பிரிட்டிஷ் அரசால் 1917இல் ‘பல்கலைக்கழகப் படை' உருவாக்கப்பட்டது. 1920இல் இந்தியப் பிராந்தியச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இது 'பல்கலைக் கழகப் பயிற்சிப் படை' என மாற்றப்பட்டது.
இதன் நோக்கம் இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களுக்கு ராணுவச் சீருடை வழங்கி, இந்திய ஆயுதப் படைகளின் ‘இந்தியமயமாக்கலுக்கு' வழிவகுப்பதாகும். 1942இல் இது 'பல்கலைக்கழக அதிகாரிகள் பயிற்சிப் படை'யாக மாற்றப்பட்டது. இதுவே இன்றைய என்சிசியின் முன்னோடி.
சமூக மேம்பாட்டு நடவடிக்கை
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமைதி காலத்திலும் இளைஞர்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்க ஒரு வலுவான அமைப்பு தேவைப்பட்டது. 1946இல் விடுதலைப் போராட்ட வீரர் எச்.என். குன்ஸ்ரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தேசிய அளவில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் அமைப்பை உருவாக்கப் பரிந்துரைத்தது. இதன்படி 1948 ஜூலை 15இல் தேசிய மாணவர் படை இந்தியாவில் தொடங்கப்பட்டது.
மாணவிகளின் பங்களிப்பை உறுதிசெய்ய 1949இல் தனிப் பிரிவு தொடங்கப்பட்டது. 1950இல் விமானப்படைப் பிரிவும் , 1952இல் கடற்படைப் பிரிவும் இணைக்கப்பட்டன. 1962 சீனப் போருக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்புக் கருதி மாணவர்களுக்கு என்சிசி பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது.
பின்னர் 1968இல் இது மீண்டும் தன்னார்வப் பயிற்சியாக மாற்றப் பட்டது. இதே காலக்கட்டத்தில், பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வழிகாட்டுதலின்படி, மாணவர்க ளிடையே சமூகப் பொறுப்பை வளர்க்க 'சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள்' பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டன.
இந்தியா- பாகிஸ்தான் (1971) போருக்குப் பிறகு, என்சிசியின் நோக்கத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. ராணுவப் பயிற்சியை விட மாணவர்களின் நன்னெறி, தலைமைப் பண்புகளைச் செதுக்குவதே முதன்மை இலக்காக மாற்றப்பட்டது. ஒரு சிறந்த குடி நபருக்குத் தேவையான ஆளுமைத் திறன், அதிகாரிகளுக்கான குணநலன்களை வளர்ப்பதே இன்றைய நவீன என்சிசியின் அடிப்படை.
ஒற்றுமை, ஒழுக்கம்
என்சிசியின் அடையாளமாகத் திகழும் ‘ஒற்றுமையும் ஒழுக்கமும்’ (Unity and Discipline) எனும் பொன்மொழி நீண்ட ஆலோ சனைகளுக்குப் பிறகு, 1980, அக்டோபர் 12இல் நடைபெற்ற 12ஆவது மத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரபூர்வ பொன்மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு சொற்களும் என்சிசியின் உயிர்நாடியாகக் கருதப்படுகின்றன:
* ஒற்றுமை: சாதி, மதம், மொழி, மாநில எல்லைகளைக் கடந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் இளைஞர்களை ‘இந்தியர்’ எனும் ஒற்றை அடையாளத்தின்கீழ் ஒன்றிணைப்பது. இது தேசத்தின் ஒருங்கி ணைந்த சக்தியாக மாணவர்களை மாற்று கிறது.
* ஒழுக்கம்: தனிமனித வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல். இது ஒரு மாணவனைப் பொறுப்புள்ள, நேர்மையான குடிநபராகச் செதுக்குகிறது.
முழுமையான ஆளுமை
இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், இளைஞர்களை நெறிப்படுத்தி, அவர்களிடம் ஒழுக்கத்தையும் நாட்டுப்பற்றையும் உருவாக்குவதில் என்சிசி மிக முக்கியமாகப் பங்காற்றுகிறது. உடற்பயிற்சி, ராணுவப் பயிற்சி என்பதையும் தாண்டி, ஒரு மனிதரை முழுமையான ஆளுமையாக மாற்றுவதில் இதன் பங்களிப்பு அளப்பரியது.
1. நேர மேலாண்மை
திட்டமிட்ட வாழ்க்கை முறை இல்லாத சூழல் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல். என்சிசியோ மாணவர்களுக்குத் திட்டவட்டமான கால ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அதிகாலையில் எழுதல், சீருடையைச் சரியாகப் பராமரித்தல் போன்ற பழக்கங்கள் மாணவர்களின் அன்றாட வேலையாக இதன் மூலம் மாறும்.
2. குழுப்பண்பு
பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் ஒன்றாக இணைந்து முகாம்களில் தங்கிப் பணியாற்றும்போது, சுயநலத்தைத்தாண்டி ‘நாம்’ எனும் கூட்டுப் பொறுப்புணர்வு அவர்களுக்குள் விதைக்கப்படுகிறது. ஒரு குழுவை எவ்வாறு வழி நடத்துவது, சக வீரர்களை எவ்வாறு அரவ ணைத்துச் செல்வது என்பது போன்ற தலைமைத்துவப் பண்புகள் இயல்பாகவே வளர்கின்றன.
3. சவாலைச் சமாளி
தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய இளையோரிடம் குறைந்து வருவதாகக் கூறப் படுகிறது. என்சிசியின் கடின
மான பயிற்சிகள், மலை யேற்றம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற செயல் பாடுகள் மாணவர்களின் மனஉறுதியை அதிகரிக்கின்றன. எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் பதற்றமடையாமல், துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஆளுமையை இது உருவாக்கு கிறது.
4. சமூகப் பொறுப்பு
என்சிசி மாணவர்கள் அணிவகுப்புகளோடு நின்றுவிடுவதில்லை. இன்றைய சமூகச் சவால்களை எதிர்கொள்வதில் அவர்கள் முன் நிற்கிறார்கள்:
* சமூக விழிப்புணர்வு: தூய்மை பாரதம், ரத்த தான முகாம்கள், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.
* பேரிடர் மேலாண்மை: வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலத்தில், மீட்புப் பணிகளிலும், மக்களுக்கு உணவு, உதவிகளை வழங்குவதிலும் என்சிசி துரித மாகச் செயலாற்றுகிறது. இது அவர்களுக்குள் ‘மக்களுக்குச் சேவை செய்வதே, தேச சேவை' எனும் எண்ணத்தை விதைக்கிறது.
5. ஒருமைப்பாடு
சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற சிறப்பு நாள்களில் தேசிய அளவிலான முகாம்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைகிறார்கள். இதன் மூலம் வெவ்வேறு மொழிகள், பண்பாடுகள், உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மாணவர்களுடன் பழகும்போது, பிராந்திய வேற்றுமைகளைக் கடந்து 'நாம் அனைவரும் இந்தியர்கள்' என்கிற பரந்த மனப்பான்மை, தேசிய ஒருமைப் பாடு இயல்பாகவே உருவாகிறது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் தடம் மாறிவிடாமல், அவர்களைச் சிறந்த குடிநபர்களாகவும், நாட்டின் தூண்களாகவும் செதுக்கும் ஒரு மிகச்சிறந்த பட்டறை யாகத் தேசிய மாணவர் படை திகழ்கிறது.
- கட்டுரையாளர்: மு.அப்துல் காதர், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, துணை என்சிசி அதிகாரி (தரைப்படைப் பிரிவு), ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்; mail2kather@gmail.com