இல்லாத சத்தங் களைக் கேட்பது அல்லது உருவங் களைப் பார்ப்பது; யாரோ தங்களைக் கண்காணிக்கிறார்கள் அல்லது தீங்கு விளைவிக்கிறார்கள் என்கிற வலுவான எண்ணம்; சிதறலான பேச்சு, சிந்தனை, தொடர்பற்ற சொற்களைப் பேசுதல், உணர்ச்சிக் குறைபாடு - மகிழ்ச்சி அல்லது சோகத்தை வெளிப்படுத்த இயலாமை, மிக முக்கியமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத எண்ணம் போன்றவை மனச் சிதைவு நோயின் அறிகுறிகள்.
மருத்துவ உலகில் பெரும் சவாலாக வும், சமூகப் புரிதலற்ற சிக்கலாகவும் இன்றளவும் ‘ஸ்கிசஃப்ரினியா’ (Schizophrenia) எனப்படும் இந்நோய் உள்ளது. இந்த மனநலப் பாதிப்பும் ஒரு மாற்றுத்திறன்தான் என்கிறது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்.
மூளையில் மாற்றம்
உடல் உறுப்புகள் சரியாக இருக்கும் போது மனநலப் பாதிப்பைக் குறைபாடு என்பது ஏன்? மாற்றுத்திறன் என்பது ஒரு நபரின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கும் தடை. மனச்சிதைவால் பாதிக்கப் பட்டவர் மற்றவர்களைப் போல இயல்பாக வேலைக்குச் செல்லவோ, சமூக உறவு களைப் பேணவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாது.
இதனால் 40% அல்லது அதற்குமேற்பட்ட மனச்சிதைவு பாதிப்பு உள்ளோர் அரசு வழங்கும் சலுகைகள், இட ஒதுக்கீடு, உதவித்தொகைகளைப் பெறத் தகுதியானவர் என்கிறது சட்டம். பரம்பரை நோய்போல இது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டாலும், மரபணு மட்டும் இதற்குக் காரணம் அல்ல.
சூழல் காரணிகளும் சேர்ந்தே நோயைத் தூண்டுகின்றன. நமது மூளையில் உள்ள செல்கள் ஒன்றோடொன்று தகவல்களைப் பரிமாற நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் எனும் வேதிப்பொருள்கள் உதவுகின்றன. இது சமநிலை இழக்கும்போது மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
மனச்சிதைவு நோய் உள்ளவர்களின் மூளை அமைப்பில் சிறு மாற்றங்கள் இருப்பதை நவீன ஸ்கேன் (MRI) ஆய்வு கள் காட்டுகின்றன. மூளையில் உள்ள திரவம் நிரம்பிய அறைகள் (Ventricles) பெரிதாக இருப்பது அல்லது மூளையின் சில பகுதிகளுக்கு இடையேயான தொடர்பு குறைவாக இருப்பது போன்ற மாற்றங்கள் இந்நோயாளிகளிடம் காணப்படு கின்றன.
குழந்தைப் பருவத்தில் கொடுமை களை அனுபவித்தல், பெற்றோரை இழத்தல் அல்லது மிகக் கடுமையான வாழ்க்கை நெருக்கடிகள், இளம் வயதில் போதைப்பழக்கம் போன்றவற்றால் மனச்சிதைவை ஏற்படுத்தக்கூடும். ஒருவ ருடைய வளர்ப்பு முறையாலோ அல்லது பலவீனமான குணத்தாலோ மனச்சிதைவு ஏற்படாது. இது ஒரு நரம்பியல் சார்ந்த உயிரியல் பாதிப்பு (Biological Disorder).
மீட்சியும் மறுவாழ்வும்
வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய சவாலாக மனச்சிதைவு இருப்பினும், நவீன மருத்துவமும் முறையான மறுவாழ்வுப் பயிற்சிகளையும் கொண்டு இதைச் சிறப்பாகக் கையாள முடியும்.
மூளையில் உள்ள வேதிப் பொருள்களில் சமநிலையைக் கொண்டுவந்து, காதில் ஒலிக்கும் மாயக் குரல்கள், தேவையற்ற பயத்தைப் போக்க மருந்துகள் உதவும். அறிகுறிகள் மட்டுப்பட்டாலும், மருத்துவரின் அறிவுரை இன்றி மருந்துகளை நிறுத்தக் கூடாது.
மருந்துகளுடன் மனநல ஆலோசனையும் கைகொடுக்கும். பாதிக்கப்பட்டவரின் எதிர்மறை எண்ணங்களை மாற்றி, மாயத்தோற் றங்களைக் கையாளும் பயிற்சியை அறிவாற்றல் நடத்தை சிகிச்சை வழங்கும். பாதிக்கப்பட்டவரை அரவணைப்பதற்குக் குடும்பத்தி னருக்கு அதிக விழிப்புணர்வு தேவை.
மற்றவர்களுடன் பேசுவது, கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பழகுவது, சமூக உறவுகளைப் பேணுவது ஆகியவற்றில் மறுவாழ்வு மையங்களின் பங்கு முக்கியம். கைவினைப் பொருள்கள் செய்தல், கணினிப் பயிற்சி போன்ற வற்றின் மூலம் கவனத்தை ஒருமுகப் படுத்தி, வருமானம் ஈட்டும் வழிகளை உருவாக்குதலும் அவசியம்.
மனச்சிதைவு நோயை, 21 வகை மாற்றுத்திறன்களில் ஒன்றாகப் பட்டியலிட்டதன் நோக்கமே, இதனால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாகக் கருதப் படுவதால்தான். அவர்களுக்குத் தேவைப்படுவது பரிதாபம் அல்ல; மற்றவர்களைப் போல வாழ்வதற் கான சம வாய்ப்பு, புரிதல்மிக்க அன்பு.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com