உயரம் ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிப்பதில்லை என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு ஜோதி ஆம்கே. 62.8 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இவர் உலகின் மிகக் குள்ளமான பெண் எனும் அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்த கத்தில் இடம்பிடித்துள்ளார். ஹாலிவுட் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.
வயதுவந்தோர் 4 அடி 10 அங்குலத் துக்கு (147 செ.மீ) குறைவான உயரம் இருந்தால் குள்ளத்தன்மை கொண்டவர் என்கிறது மருத்துவ அறிவியல். இது நோய் அல்ல, ஒரு வகையான வளர்ச்சி மாற்றம் அல்லது மரபணு மாறுபாடு. உலக அளவில் 200க்கும் மேற்பட்ட மருத்துவக் காரணங்களால் குள்ளத்தன்மை ஏற்படுகிறது.
குள்ளத்தன்மை எதனால்?
குள்ளத்தன்மை ஏற்படுவதற்குப் பின்னால் பல மரபணு, மருத்துவக் காரணங்கள் உள்ளன.
* சமச்சீரற்ற குள்ளத்தன்மை: இதில் உடல் பாகங்கள் ஒன்றுக்கொன்று சரியான விகிதத்தில் இருக்காது. எடுத்துக்காட்டாக தலை, உடல் இயல்
பான அளவில் இருக்கும். கைகள், கால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதற்கு ‘அகோண்ட்ரோபிளாசியா' முக்கியக் காரணமாகும்.
* சமச்சீரான குள்ளத்தன்மை: இதில் உடல் பாகங்கள் அனைத்தும் ஒன்றுக் கொன்று சரியான விகிதத்தில் இருக்கும். ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். இது பெரும் பாலும் ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படுகிறது.
முக்கிய காரணங்கள்
* மரபணு மாற்றம்: பெற்றோர் உயரமாக இருந்தாலும், கரு உருவாகும்போது தன்னிச்சையாக ஏற்படும் மரபணு மாற்றம்.
* பரம்பரை: குள்ளத்தன்மை கொண்ட பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இது வர வாய்ப்புள்ளது.
* வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு: பிட்யூட்டரி சுரப்பி போதிய அளவு வளர்ச்சி ஹார்மோன்களைச் சுரக்காதபோது உடல் வளர்ச்சி தடைப்படுகிறது.
சவால்களும் தீர்வுகளும்
குள்ளத்தன்மை கொண்டவர்கள் எதிர் கொள்ளும் உடல்ரீதியான சிரமங்கள் சாதாரணமானவை அல்ல.
* முதுகெலும்பு வளைவு அல்லது நரம்புகள் அழுத்தப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
* குறுகிய மூச்சுக்குழாய் காரணமாக உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* காதுகளின் உட்புற அமைப்பு சிறியதாக இருப்பதால் அடிக்கடி தொற்று ஏற்படக்கூடும்.
ஜோதி ஆம்கே
இருப்பினும், நவீன மருத்துவ உலகம் இவர்களுக்குப் பல்வேறு தீர்வுகளை வழங்குகிறது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால், ஹார்மோன் சிகிச்சைகள் மூலம் சிலரது வளர்ச்சியைத் தூண்ட முடியும். எலும்பு வலிமையை அதிகரிக்கவும், மூட்டுவலிகளைப் போக்கவும் பிசியோதெரபி உதவும்.
சமூகச் சிக்கல்
சராசரி உயரம் கொண்டவர்களுக் காகவே வடிவமைக்கப்பட்ட பொருள் களால் ஆனது உலகு. இதனால் பேருந்துப் படிக்கட்டுகள், அலுவலக மேசைகள், சுவிட்ச் போர்டுகள், கழிப்பிடம் என அடிப்படைத் தேவைகளைக்கூட மற்றவர்களின் உதவி யின்றிப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதசூழல் குள்ளத்தன்மை உடையோருக்கு ஏற்படுகிறது.
மேலும், நீண்ட நேரம் நடப்பதோ, நிற்பதோ அவர்களின் எலும்பு அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, முதுகுவலி, மூட்டு வலி போன்ற நாள்பட்ட உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.
இதுபோக சமூகரீதியாக அவர்கள் சந்திக்கும் மன உளைச்சல் கொடியது. பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் விசித்திரமாகப் பார்ப்பதும், கேலி பேசுவதும் அவர்களின் தன்னம் பிக்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது.
குறிப்பாகக் கல்வி நிலையங்களிலும் பணியிடங்களிலும் அவர்களின் திறமையை விடவும் உருவமே முன்னிறுத்தப்படுவதால், தகுதியிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
அவர்கள் முதிர்ச்சியடைந்த பெரியவர்களாக இருந்தாலும், 'சிறுபிள்ளை' போன்ற தோற்றத்தின் சமூகம் அவர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை. இத்தகைய பாகுபாடுகளும், “தங்களால் எதையும் தனியாகச் செய்ய முடியாது" என்ற பிம்பமும் அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளுகின்றன.
சட்டத்தின் குரல்
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கில், குள்ளத்தன்மையை ஒரு தனித்துவமான மாற்றுத்திறனாக அங்கீகரித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (2016) வழங்குகிறது.
இச்சட்டத்தின் படி, 147 செ.மீ., அல்லது அதற்கும் குறைவானவர் குள்ளத்தன்மையாளர். அரசு சலுகைகளைப் பெற அவர் தகுதியானவர். கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள இடஒதுக்கீடு, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
மேலும் பொது இடம், போக்குவரத்து, கட்டிடங்கள் குள்ளத் தன்மை கொண்டவர்களின் பயன் பாட்டுக்கு ஏற்றவாறு தடையற்ற சூழலில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. வெறும் சலுகைகளைத் தாண்டி, அவர்கள் சுயமரியாதை யுடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற் கான உரிமையை இச்சட்டம் உறுதிப் படுத்துகிறது.
செய்ய வேண்டியவை
* மரியாதைக் கொடுங்கள்: குள்ளத் தன்மையானவர்களைக் கண்டால் விசித்திரமாகப் பார்ப்பதையோ, ஒளிப்படம் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
* உதவிக் கரம்: பொது இடத்தில் அவர்கள் கைகள் எட்டாத உயரத்திலி ருக்கும் பொருள்களை எடுக்கச் சிரமப்பட்டால், கண்ணியத்தோடு உதவி செய்ய முயல வேண்டும்.
* குழந்தைகளிடம் விழிப்புணர்வு: குழந்தைகளுக்கு உடல் மாற் றங்கள் இயற்கை என்பதைப் புரிய வைக்க வேண்டும். யாரையும் உருவக் கேலி செய்யக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.
வானத்தை எட்டிப்பிடிக்க ஏணிகள் தேவையில்லை, விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும். ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை உணரும் போது, உருவக் கேலிகள் மறைந்து மனிதாபிமானம் தழைக்கும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com