மாணவர்களிடம், “பாடப் புத்தகத்தில் இல்லாத ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் எங்கே செல்ல வேண்டும்?” எனக் கேட்டேன். நூலகம் செல்ல வேண்டும். இணையத்தில் தேட வேண்டும். ஆசிரியரிடம் கேட்க வேண்டும் என்று பல பதில்கள் வந்தன.
“சமூகத்துக்குள் செல்லுங்கள், அங்கே வாழ்க்கை உங்களுக்குப் பாடம் நடத்தும்!” என்றேன். அதன் பிறகு, ‘மாணவத் தன்னார்வ இயக்க’த்தைத் தொடங்கினோம்.
மதிப்பெண் பெறும் இலக்கைத் தாண்டி மாணவர்கள் மனிதர்களாக வளர வேண்டும். பிறருடைய பசியை உணர வேண்டும். துயரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும். சமூகத்தின் தேவைகளுக்குத் தங்களால் இயன்ற அளவு துணை நிற்க வேண்டும்.
இந்த எண்ணத்தை மாணவர்களிடம் விதைப் பதே மாணவத் தன்னார்வ இயக்கத்தின் அடிப்படை நோக்கம். சாலையோரத்தில் வாழும் ஒருவருக்கு உணவளிக்க மாணவர்களோடு சென்றிருந்தோம். உணவுப் பொட்டலத்தை வாங்கியவர், சில நொடிகள் மாணவர்களைப் பார்த்தார்.
பின்னர் புன்னகைத்தார். அவரது முகமலர்ச்சி மாணவர்களை அமைதிப்படுத்தியது. அன்று வகுப்பறையில் நான் எந்தப்பாடத்தையும் நடத்தவில்லை. மாணவர்களோ மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டிருந் தார்கள். அந்நாளிலிருந்து உணவைப் பகிர்ந்து கொள்வது மாணவர்களுக்கு ஒரு பொறுப்பாக மாறியது.
இல்லம் தேடும் உள்ளங்கள்
முதியோர் இல்லங்களுக்குச் செல்லும்போதெல் லாம், ‘அவர்களிடம் என்ன பேசுவது?’ என்கிற தயக்கம் மாணவர்களிடத்தில் எட்டிப் பார்க்கும்.
சில நிமிடங்களில் ஒரு மாணவர் முதியவரிடம் பேசுவார். மற்றொருவர் உணவு வழங்குவார்.
சிலர் அமைதியாக அவர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்பார்கள். அப்போது மாணவர்களுக்கு ஓர் உண்மை புரியும். வயதானவர்களுக்கு உணவு மட்டும் தேவையில்லை. அவர்களுக்குத் தேவைப்படுவது உறவின் கதகதப்பும் அன்பின் அரவணைப்பும்.
மரம் நடுவது போதாது!
மாணவர்களோடு மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அப்போதெல்லாம், “மரக்கன்று நடுவது ஒளிப்படத்துக்காக அல்ல, எதிர்காலத்துக்காக” என்பேன்.
ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்றுவிடுவது சுற்றுச்சூழல் சேவை ஆகாது. அதைப் பாதுகாக்க வேண்டும்.
தண்ணீர் ஊற்ற வேண்டும். மரமாக மாறும்வரை அதன்மீது அக்கறை செலுத்த வேண்டும். அதனால்தான் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் மாணவர்களிடம் ஒப்படைக்கிறோம்.
நிமிர வைக்கும் உதவி
சமூகத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தேவை. ஒரு மாணவருக்குப் பள்ளிப் பொருள்கள் தேவைப்படலாம். மற்றொருவருக்குக் கல்விச் செலவுக்கான உதவி தேவைப்படலாம். ஒரு மாற்றுத் திறனாளிக்கு உதவும் கருவி தேவைப்படலாம்.
அவரவர் தேவையை அறிந்து, இயன்ற அளவில் உதவிக்கரம் நீட்டுகிறோம். எல்லாவற்றையும்விட முக்கியம், உதவி செய்யும்போது ஒருவரின் சுயமரியாதையைப் பாதுகாத்தே உதவ வேண்டும்.
உதவி பெறுபவரைத் தாழ்வாக உணரவைப்பது உதவி அல்ல. அவரை நிமிர்ந்து நிற்க வைப்பதே உண்மையான உதவி. மாணவர்களோடு சேவைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டே செல்ல விரும்புவதில்லை.
அவர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முதியவரின் கண்களைப் பார்க்கட்டும். ஒரு பசியான மனிதரின் கையைப் பார்க்கட்டும். ஒரு மரக்கன்றின் வளர்ச்சியைப் பார்க்கட்டும்.
ஓர் உதவி பெற்ற மாணவரின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியைப் பார்க்கட்டும். அந்தக் காட்சிகளே அவர்களுக்கான மிகப்பெரிய பாடப்புத்தகங்கள். அனுபவத்தால் கற்றுக்கொள்ளும் மனிதநேயம் வாழ்நாள் முழுவதும் மறக்காது.
- பா.நூருல்லாஹ், ஆசிரியர், முன்னாள் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர், அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, மதுரை; தொடர்புக்கு: noorrullah85@gmail.com