கற்றல் குறைபாட்டின் காரணமாக பொதுப் பள்ளியால் நிராக ரிக்கப்பட்ட சிறுவன் பிற்காலத்தில் உலகையே வியக்க வைத்த ‘சார்பியல் கோட்பாட்டை' கண்டுபிடிப்பான் என யாரும் நினைக்கவில்லை.
ஆம்! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறுவயதில் ‘டிஸ்லெக்சியா' எனும் கற்றல் சவாலை எதிர்கொண்டவர். ஏழு வயதுவரை ‘தாமதமாகப் பேசும் குழந்தையாக' இருந்தார். பள்ளிப் பாடங்களை மனப்பாடம் செய்வதிலும், மொழிக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வதிலும் மிகுந்த சிரமப்பட்டார்.
ஆனால், சொற்களுக்குப் பதிலாகப் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்திக்கும் தனித்துவமான ஆற்றல் அவரிடம் இருந்தது. இந்த ‘காட்சிரீதியான சிந்தனை' (Visual Thinking) முறையே, ஒளியின் வேகத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும், பின்னாளில் சார்பியல் கோட்பாட்டை உருவாக்குவதற்கும் அவருக்குப் பெருந்துணையாக நின்றது.
புத்திசாலித்தனமாகப் பேசும் ஒரு குழந்தை, எழுதும்போது மட்டும் எழுத்துகளைத் தலை கீழாக எழுதுவது ஏன்? கணித வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய முடியாமல் திணறுவது ஏன்? இவை சோம்பேறித்தனமோ, கவனக் குறைவோ அல்ல 'கற்றல் குறைபாடுகள்' எனப்படும் நரம்பியல் சார்ந்த நிலை.
கற்றல் குறைபாடு
தகவல்களை மூளை செயலாக்கும் விதத்தில் ஏற்படும் ஒரு சிறிய வேறுபாடே ‘கற்றல் குறைபாடு’. இந்த வகை சிறாரின் அறிவுத்திறன் (IQ) சராசரியாகவோ, சராசரிக்கும் அதிகமாகவோ இருக்கும். ஆனால், தகவல்களைப் பெறுவதிலும், அதை வெளிப்படுத்துவதிலும் அவர்களுக்குச் சவால்கள் இருக்கும். மனித மூளை ஒரு கணினி என்றால், அதன் ‘ஹார்டுவேர்' சரியாக இருந்து, ‘சாஃப்ட்வேர்' இயங்கும் விதம் மட்டும் சற்று மாறுபடும் நிலை இது. கற்றல் குறைபாடுகளைப் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:
வாசிப்பதில் சிரமம்
எழுத்துகளை அடையாளம் காண்பதிலும், ஒலிகளுடன் அவற்றை இணைப்ப திலும் டிஸ்லெக்சியா (Dyslexia) கொண்ட குழந்தைகளுக்குச் சிரமம் இருக்கும். ‘b', ‘d' ஆகிய எழுத்துக்களுக்கு இடையே குழப்பம் அடைவார்கள். ‘was' என்பதை ‘saw' என வாசிப்பதுபோல் வார்த்தைகளைத் தலைகீழாக வாசிப்பார்கள். வாசிக்கும்போது வரிகளைத் தவிர்த்துவிடுவார்கள்.
எழுதுவதில் சிரமம்
எழுத்துகளைச் சரியான வடிவில் எழுது வதிலோ, எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வருவதிலோ டிஸ்கிராபியா (Dysgraphia) இருக்கக்கூடியவர்களுக்குச் சவால் இருக்கும். பென்சிலைப் பிடிப்பதில் அதிக அழுத்தம் கொடுப்பார்கள். சொற் களுக்கு இடையே இடைவெளி விடுவதில் தடுமாற்றம் ஏற்படும்.
கணிதத்தில் சிரமம்
எண்களைப் புரிந்துகொள்வது, கணக்கு களைப் போடுவது, நேரத்தை மேலாண்மை செய்வதில் டிஸ்கால்குலியா (Dyscalculia) உள்ளோருக்குப் பிரச்சினை இருக்கும். கூட்டல், கழித்தல் குறியீடுகளைக் குழப்பிக் கொள்வார்கள். கடிகாரத்தில் முட்கள் காட்டும் நேரத்தைச் சொல்லத் தடுமாறுவார்கள். எண் வரிசைகளை நினைவில் கொள்ளச் சிரமப்படுவார்கள்.
கண்டறிவது எப்படி?
பெற்றோர்களும் ஆசிரியர்களும் தொடக்கக்காலத்திலேயே சில அறிகுறிகளைக் கவனிப்பதன் மூலம் இக்குழந்தைகளுக்கு உதவ முடியும். இடது, வலது கண்டறிவதில் குழப்பம், பேச்சுத் திறனில் தாமதம், புதிய சொற்களைக் கற்க ஆர்வமின்மை, ரைமிங் (Rhyming) சொற்களை உச்சரிக்கத் தடுமாறுதல், சட்டையின் பொத்தான்களைப் போடுவது போன்ற நுணுக்கமான வேலைகள் (Fine Motor Skills) இவர்களுக்குக் கடினம்.
குடும்பச்சூழல் காரணமாகக் குழந்தைகளின் கற்றலில் சிக்கல்கள் இருக்க வாய்ப்புள்ளதால், கற்றல் குறைபாடு உடையவர் என அடையாளப்படுத்தும் முன் சரியான கற்றல் குறைபாடு சார்ந்த மதிப்பீடுகள் அவசியம்.
நமது சமூகத்தில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை ‘மந்தமானவர்கள்', ‘முட்டாள்கள்' என முத்திரை குத்தும் வழக்கம் உள்ளது. இது அக்குழந்தைகளின் தன்னம்பிக்கையைச் சிதைத்துவிடும்.
ஆனால், இது பெற்றோரின் வளர்ப்பு முறையாலோ, குழந்தையின் மந்தபுத்தியாலோ ஏற்படுவது அல்ல. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, குடும்பத்தில் யாருக்காவது இக்குறைபாடு இருந்தால், குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும், பிரசவ காலச் சிக்கல்கள், ஆக்சிஜன் குறைபாடு அல்லது மூளையில் ஏற்படும் சிறு மாற்றங்களும் காரணம் ஆகலாம்.
தேவையான வழிகாட்டுதல்
பொறுமை அவசியம்: உங்கள் குழந்தை ஒரு விஷயத்தை மெதுவாகக் கற்றுக்கொண்டால் எரிச்சல் அடையாதீர்கள். அவர்களுக்குப் புரியும் வகையில் படங்கள், கதைகள், காணொளிகள் மூலம் கற்றுக்கொடுங்கள்.
பலத்தைக் கண்டறிதல்: படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அக்குழந்தை ஓவியம் வரைவதிலோ, விளையாட்டிலோ, இசையிலோ சிறந்து விளங்கலாம். அந்தத் திறமையை ஊக்குவியுங்கள்.
பாராட்டுங்கள்: சிறிய முன்னேற்றத்தைக் கூட மனதாரப் பாராட்டுங்கள். ‘உன்னால் முடியும்' என்பது அவர்களுக்கு ஒரு மருந்தாகும்.
சிறப்புக் கல்வி: பயிற்சி மூலம் கற்றலை எளிதாக்க உதவும் சிறப்பு ஆசிரியர்கள், உள வியல் நிபுணர்களின் உதவியை நாடுங்கள்.
அரசு சலுகைகள்
இந்தியாவில் இக்குழந்தைகளுக்காகப் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வுகளில் கூடுதல் நேரம் (Extra Time).
கணிதத்திற்குப் பதில் வேறு பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு. எழுதுவதற்கு உதவியாளர் (Scribe) வசதி. மொழிப் பாடங்களில் சில விலக்குகள்.
இவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவும். கற்றல் குறைபாடு என்பது ஒரு தடையல்ல.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான பூ. சில பூக்கள் அதிகாலையில், வேறு சில நள்ளிரவிலும் மலரும். காலம் மாறினாலும், அவை ஒவ்வொன்றும் அதன் அழகையும் மணத்தையும் தன்னுள் வைத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com