ஆங்கிலம் அறிவோம்

Operation Sindoor என்கிறார்களே ஏன்? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 132

ஜி.எஸ்.எஸ்

Marine என்றால் தண்ணீர் என்று கொள்ளலாமா? - Marine என்றால் கடல்சார்ந்த அல்லது கப்பல்கள் சார்ந்த என்று கொள்ளலாம். Marine insurance, Marine engineer. Marine என்பதன் சமச்சொற்களாக naval, maritime ஆகியவற்றைச் சொல்லலாம்.
Marine என்பதை noun ஆகப் பயன்படுத்தும்போது கடலில் போரிடுவதில் பயிற்சி பெற்ற வீரரை அது குறிக்கிறது.

Operation Sindoor என்கிறார்களே, ஆபரேஷன் என்பதை இதுவரை மருத்துவமனையோடு மட்டுமே இணைத்துப் பார்த்திருக்கிறேன். அது எப்படி ராணுவ நடவடிக்கைக்குப் பொருந்தும்? - அறுவை சிகிச்சையை ஆபரேஷன் என்போம். ஆனால், அந்தச் சொல்லுக்கு வேறு சில பொருள்களும் உண்டு. அவற்றில் ஒன்று ‘ஒருங்கிணைந்த செயல்பாடு’. அதாவது பலரும் சேர்ந்து ஈடுபட்டிருக்கும் திட்டமிடப்பட்ட செயல்பாடு. அந்தப் பொருளில்தான் Operation Sindoor என்கிறார்கள். Rescue operation, Operation flood என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

1991 வளைகுடா போரில் சில நாடுகள் இணைந்து இராக்குக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்கு Operation Desert Storm என்று பெயரிட்டனர். தொடக்கக் கல்வி அமைப்புகளுக்கு போதிய வசதிகளை வழங்கத் தொடங்கிய திட்டத்தை இந்தியாவில் Operation Blackboard என்றனர். இயக்கம், இயக்கமுறை ஆகிய பொருள்களும் இந்தச் சொல்லுக்கு உண்டு. The machine operates. The operation of these machines is very easy.

Surgical strike என்பதற்கும் surgery என்பதற்கும் தொடர்பு உண்டா? - அட, மருத்துவத்தையும் ராணுவத்தையும் இணைக்கும் மற்றொரு கேள்வி! Surgical strike என்பதை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதாக எண்ணக் கூடாது! அது ராணுவம் தொடர்பானது. துல்லியமாக (எதிரி நாட்டின் குறிப்பிட்ட பகுதியின் மீது) நடைபெறும் தாக்குதல்.

Put என்பதற்கும் Keep என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? - ‘பேனாவை மேஜை மீது வைக்கவும்’ என்பதைக் குறிப்பிட Put the pen on the table, Keep the pen on the table ஆகிய இரண்டு வாக்கியங்களில் ஒன்றை நாம் பயன்படுத்துவது வழக்கம். Put என்பதில் ஒரு செயல்பாடு தேவைப்படுகிறது. Put the articles in a container என்றால் சில பொருள்களை ஒரு பாத்திரத்தில் போட வேண்டும் என்ற உத்தரவு.

Keep என்பது ஒன்றைத் தொடர்ந்து வைத்திருப்பது அல்லது செயல்படுத்துவது என்பதையும் குறிக்கிறது. Keep the articles in a container என்று ஒருவர் உங்களிடம் கூறினால் அந்தப் பொருள்களை நீங்கள் பாத்திரத்துக்குள் (அப்போது) வைக்க வேண்டும்’ என்பதையும் அது குறிக்கலாம்.

‘அந்தப் பொருள்களை (எப்போதும்) பாத்திரத்தில் நீங்கள் வைத்திருக்க வேண்டும்’ என்பதையும் அது குறிக்கலாம். Keep your valuables in safe vault. Put என்பது ஒரு செயல் தொடர்பானது. Keep என்பது அந்தச் செயலைத் தொடரும் நிலையும்கூட.

கேட்டாரே ஒரு கேள்வி: ஒருவரை நகல் எடுத்தது போலவே செயல்பட்டால் Copycat என்கிறார்களே, பூனைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? - பூனைகளுக்குப் பிறரைப் போல செயல்படும், அதாவது காப்பி அடிக்கும், பழக்கம் உண்டு. ஆனால், குரங்கு உள்பட வேறு சில விலங்குகளும் நாம் செய்வதைத் திருப்பிச் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பூனை ஒரு முக்கிய வளர்ப்பு பிராணி.

அதனாலோ என்னவோ பூனையை அடிப்படையாக கொண்டு பல ஆங்கில வார்த்தைகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. நாகரிகமாகவும் எதற்கும் டென்ஷன் ஆகாமலும் இருப்பவரை cool cat என்றும், அதிகாரமும் செல்வமும் மிக்கவரை fat cat என்றும், எளிதில் பயப்படுபவரை scaredy cat என்றும் குறிப்பிடுவதுண்டு.

சிப்ஸ்

Don’t fuss என்றால்? - அலட்டிக் கொள்ளாதே. பெரிதுபடுத்தாதே.

Weed? - களை, போதைப் பொருள்

சில கடைகளின் பெயர்ப் பலகைகளில் emporium என்ற சொல்லைப் பார்க்கிறேன். இதற்கு என்ன பொருள்? - பல்பொருள் அங்காடி.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT