ஆங்கிலம் அறிவோம்

கொடுக்காப்புளியை என்னவென்று சொல்ல? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 130

ஜி.எஸ்.எஸ்

Abdomen னும் stomach வும் ஒன்றுதானா? தொப்பை விழுந்து விட்டது என்பதைக் குறிக்க இவற்றில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும்? - பேச்சு வழக்கில் abdomen, stomach என்கிற இரு சொற்களையும் ஒன்றுக்குப் பதில் மற்றொன்று எனப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். Stomach என்பது இரைப்பை எனப்படும் வயிறு. Abdomen என்பது வயிற்றுப்பகுதி. அதாவது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் ஆகிய அனைத்தும் இடம் பெற்றுள்ள பகுதி. Belly என்பது abdomen என்று விவரிக்கப்பட்ட பகுதியின் வெளிப்புறம்.

அதாவது அங்குள்ள தோல், தசை, கொழுப்பு ஆகியவற்றை இது குறிக்கிறது. எனவே தொப்பை (விழுந்துவிட்டது) என்று நாம் குறிப்பிடுவது bellyயைத்தான். Tummy, tucky என்றெல்லாம்கூட தொந்தியைச் செல்லமாகக் குறிப்பிடுவது உண்டு. தொப்பைக்கு நடுவில் உள்ள சிறிய பள்ளப்பகுதி (தொப்புள் கொடி இருந்த பகுதி) belly button

Limit, limitation இரண்டும் ஒன்றுதானா? - உங்கள் கேள்வியைப் படித்ததும் நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது அலுவலகத் தோழியை விழாவில் பாடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதிலும் பாஸ்கர் என்பவர் கொஞ்சம் அதிகமாகவே வற்புறுத்தினார். அதற்கு அந்தத் தோழி “Sir, I have my limitations and you have your limitations” என்றார். பாஸ்கரின் முகம் சிவக்க அந்த இடத்தை விட்டே வெளியேறிவிட்டார்.

நடந்தது இதுதான். தோழி பயன்படுத்திய சொல் limitation. அதாவது குறைபாடு. “மேடையில் பாட முடியாது என்பது என் குறைபாடு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைபாடு உண்டு” என்கிற அர்த்தத்தில் அவர் கூற, பாஸ்கர் அதை “உங்கள் எல்லையைத் தெரிந்து கொண்டு அடங்கி இருங்கள்” என்று தோழி கூறியதாக நினைத்துவிட்டார். Limits என்பதற்கும் limitations என்பதற்கும் உள்ள வேறுபாடு புலப்படாததால் உண்டான பிரச்சினை. Limit என்பது வரம்பு. Limitation என்பது இயலாமை அல்லது சாத்தியக் குறைவு.

கமர்கட், கொடுக்காப்புளி, தேன் மிட்டாய் ஆகியவற்றைச் சிறு வயதில் விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன். இந்த​த் தகவலைப் பேரனிடம் பகிர்ந்து கொண்டால் அவற்றின் ஆங்கிலச் சொற்களைக் கேட்கிறான். உதவுங்கள். கமர்கட் என்பது kamarcut. கொடுக்காப்புளி என்பது monkey pod. தேன் மிட்டாய் என்பது honey candy. வலைத்தளத்தில் இவற்றின் படங்களைக் காட்டுங்கள். அப்போது உங்கள் முகத்தில் தோன்றும் பரவச உணர்வையும் கண்டு அவன் இவற்றின் மகிமையைப் புரிந்து கொள்வான்!

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT