பத்து ஆண்டுகளுக்கான திட்டமாக இருந்தால் மரங்கள்நட வேண்டும், 100 ஆண்டுகளுக்கான திட்டமாக இருந்தால் மக்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்கிறது ஒரு சீன பழமொழி.
சுற்றுச்சூழல் கல்வி, மாணவர்களுக்கு இன்றைய கட்டாயத் தேவை ஆகும். இயற்கை இன்றி மனிதன் வாழமுடியாது என்ற பேருண்மையைச் சுற்றுச்சூழல் கல்வி மூலம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்பும் அனைவரும் இதனை முன்னெடுக்கலாம். பன்னிரண்டு ஆண்டுக்காலம் தொடரும் பள்ளி வாழ்க்கையின்போது மாணவர்கள் 10 ஆண்டு திட்டமாக மரம் வளர்க்க செய்து பழக்குவதும் கூட சுற்றுச்சூழல் மீதான அன்பையும் அக்கறையும் ஊட்டும்.
நம்முடைய வசிப்பிடங்களில் இருக்கும் நீர்நிலைகள், சாலையோரங்கள், பயன்பாடின்றி இருக்கும் வீடுகள் போன்றவற்றை நாம்குப்பை கிடங்காக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல நம்மால் ஏற்படுத்தப்படும் கழிவுகளால் எண்ணிலடங்கா உயிரினங்கள், விலங்குகள், நீர் நிலைகள் உட்பட அனைத்தும் மாசடைகிறது என்பதை உணர்ந்து இந்த செயல்களை நாம் தவிர்க்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றால் மனிதர்கள் ஏற்படுத்திய குப்பை மேட்டில் நாம் மீண்டும் குப்பை போடாமல் அரசாங்கம் வைத்துள்ள குப்பைத் தொட்டியைப் பயன்படுத்துவதும், நீர்நிலைகளில் குப்பையை வீசிஎறியாமல் இருப்பதும் தான் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாடத்தின் அரிச்சுவடி. இயற்கை பாதுகாப்பதே நம் அடுத்த நாள் வாழ்வதற்கான ஆதாரம் என்பதை உணர்த்து வதோடு அதற்கேற்ப வாழவும் பழக்க வேண்டும்.