வெற்றிக் கொடி

தொடுதலின் வழி தொடங்கும் பயணம் | நட்சத்திரக் குழந்தைகள் 13

ரேவதி

மிகச் சிறந்ததும் அழகானதுமான விஷயங்களைப் பார்க்கவும் முடியாது, தொடவும் முடியாது; அவற்றை உணர மட்டுமே முடியும். இது கேட்டல் - பார்வைக் குறைபாடு உடையவர்களின் (deaf blind) முன்னோடி ஹெலன் கெல்லரின் சத்தியவாக்கு.

கடுமையான காய்ச்சலால் பார்வையையும் கேட்கும் திறனையும் 1 வயது 7 மாதங்களே ஆன ஹெலன் கெல்லர் இழந்தார். இருளில் ஒளியாக அவருக்கு வந்தசேர்ந்தார் ஆசிரியர் ஆன் சல்லவன்.

தண்ணீர் குழாயின் கீழ் ஹெலனின் கையை வைத்து, ‘water' சொல்லை அவளது கையில் ஆன் எழுதிய தருணம், ஹெலன் ஒரு பெரிய உண்மையை உணர்ந்தார்: “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது!”.

அதன் பிறகு பிரெய்ல் கற்றார், பேசக் கற்றார், கல்லூரியில் பட்டம் பெற்றார், உலகம் முழுவதும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஊக்கம் அளித்தார். அவரது சுயசரிதை ‘என் கதை’ இன்றுவரை எண்ணற்ற இதயங்களுக்கு நம்பிக்கையைப் பாய்ச்சும் பேரொளி.

கேட்டல் - பார்வை இழப்பு

காது கேட்கும் திறனும் (Hearing impairment), கண்ணால் காணும் திறனும் (Visual impairment) இணைந்து பாதிக்கப்பட்ட நிலை ‘கேட்டல் - பார்வை இழப்பு' (Deafblindness). இதனால் தகவல் பெறுவது, தொடர்புகொள்வது சவாலான காரியமாகி விடும்.

          

மரபியல் காரணிகளால் குழந்தை பிறக்கும்போது கேட்டல் குறைபாடு ஏற்பட்டு, பின்னர் பார்வையும் மெதுவாகக் குறைந்துவிடும் குறைபாடு இது. பிற்காலத்தில் ஏற்படும் விபத்துகள், தலையில் அடிபடுதல் அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற தீவிர நோய்களும் இந்த நிலையை உருவாக்கக்கூடும்.

ஒருவருக்கு ஒரே நேரத்தில் கேட்கும் திறனும், பார்க்கும் திறனும் பாதிக்கப்படும்போது, அவர் தனி உலகத் துக்குள் தள்ளப்படுகிறார். இவர்களுக்கான கல்வி, வாழ்க்கைமுறைப் பயிற்சி என்பது வெறும் பாடம் நடத்துவது மட்டுமல்ல; அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு உலகை அறிமுகப்படுத்தும் ஒரு நெடும் பயணம்.

தொடுதல் வழி தொடர்பு

தொடு உணர்வே இவர்களின் தொடர்பு மொழி. இவர்களின் கைகளே கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றன. இவர்கள் மற்றவர்களுடன் உரையாடப் பல்வேறு தனித்துவமான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

குறிப்பாக, தொடுவழி சைகை மொழி மூலம் சைகைகளை ஒருவரின் கைகளைத் தொட்டு உணர்வதன் மூலம் புரிந்துகொள்கின்றனர். பேசுபவரின் தாடை, தொண்டைப் பகுதியில் கைகளை வைத்து, அதன் அதிர்வுகள் மூலம் அவர்கள் பேசுவதை உணர வைக்கும் தடோமா (Tadoma) முறையும் இவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.

மேலும், எழுத்துக்களைத் தடவிப் பார்த்து வாசிக்கும் பிரெய்ல் (Braille) முறையையும், உள்ளங்கையில் எழுத்துக்களை வரைந்து காட்டித் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் பிளாக் ஆல்ஃபபெட் (Block Alphabet) முறையையும் பயன்படுத்தி இவர்கள் மிகச்சிறப்பாகத் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும்.

நடக்கப்போவது என்ன?

ஒரு வேலையைச் செய்வதற்கு முன், அந்த வேலை யோடு தொடர்புடைய ஒரு பொருளை அவர்களிடம் கொடுத்து உணரவைக்க வேண்டும். இவ்வாறு செய்வது, "அடுத்து இதுதான் நடக்கப்போகிறது" என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதாகும்.

குழந்தையைக் குளிக்க அழைத்துச் செல்வதற்கு முன் ஒரு சிறிய சோப்பு அல்லது துண்டை அவர்கள் கையில் கொடுக்கலாம். வெளியே அழைத்துச் செல்வதற்கு முன், அவர்களின் செருப்பையோ அல்லது ஊன்றுகோலையோ கையில் கொடுக்கலாம்.

இதன் மூலம், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அவர்கள் பதற்றமில்லாமல் இருப்பார்கள். ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நேரடியாகக் கற்றுத்தரும் உடல்ரீதியான வழிகாட்டுதல் முறை, ஒருவர் கையை மற்றொருவர் கையால் பிடித்துக் கற்றல் (Hand-over-Hand Technique).

ஆசிரியர், மாணவரின் கைகளுக்கு மேல் தனது கைகளை வைத்து, ஒரு செயலைச் செய்ய அவருக்கு வழிகாட்டுவார். இதன் மூலம் அந்தப் பொருளின் வடிவம், அதன் இயக்கம், அந்தச் செயலைச் செய்யும் விதம் ஆகியவற்றை மாணவர் நேரடியாகத் தன் தசைகளின் மூலம் உணர்ந்துகொள்வார்.

இவ்வாறு, இருட்டும் அமைதியும் நிறைந்த உலகில் வாழும் கேட்டல் - பார்வை இழந்த நபர்களுக்கு, நாம் கொடுக்கும் ஒவ்வொரு தொடுதலும் ஒரு சொல்லாகவும், ஒவ்வொரு வழிகாட்டுதலும் ஒரு வெளிச்ச மாகவும் மாறும்.

அவர்களால் உலகத்தைப் பார்க்க முடியாது, கேட்க முடியாது ஆனால் உணர்ந்துகொள்ள முடியும். அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் கைகோத்து நடந்தால், அவர்கள் வாழ்க்கை மட்டும் அல்ல, சமூகமும் உயரும்.

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com

SCROLL FOR NEXT