அழகான பூக்கள் வரையப்பட்ட பலூனை எடுத்துக்கொள்ளுங்கள். பலூன் ஊதப்படு வதற்கு முன்பு அதில் உள்ள பூக்கள் நெருக்கமாகக் காணப்படும். ஊதத் தொடங்கினால் பலூனில் உள்ள பூக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகும். இதுவே பிரபஞ்சத்திலும் நடக்கிறது.
பிரபஞ்சத்தில் உள்ள தொலைநிலை விண்மீன் மண்டலங்கள் (Galaxies) இப்படித்தான் ஒன்றைவிட்டு மற்றொன்று நகர்ந்துகொண்டே இருக்கின் றன. காரணம் விண்மீன் மண்டலங்களுக்கு இடையிலான, இடைவெளியை மெதுவாக விரித்துக் கொண்டிருக்கும் ஒரு மர்ம ஆற்றல். அதுதான் Dark Energy எனப்படும் ‘புலப்படாத ஆற்றல்’.
விரிவடையும் பிரபஞ்சம்
அமெரிக்காவின் இரண்டு வெவ்வேறு வானியல் ஆய்வுக்கூடங்களில், இரண்டு அறிவியலாளர்கள், இரு வேறு பிரச்சினைகளை 1912இல் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். ஒருபக்கம், வானியலாளர் ஹென்றியட்டா ஸ்வான் லெவட் விண்மீன்களை ஆராய்ந்து, தொலைவில் உள்ள விண்மீன்களின் தொலைவைக் கணக்கிடும் வழியை உருவாக் கினார்.
அதேநேரத்தில், வானியலாளர் வெஸ்டோ ஸ்லிபர் விண்மீன் திரள்களின் ஒளியை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது விண்மீன் திரள்களிடமிருந்து வரும் ஒளி அலைகள் நீண்டு, சிவப்பு நிறத்தை நோக்கி நகர்வதை அவர் கவனித்தார்.
ஒரு ரயில் நம்மைவிட்டுத் தூரமாகச் செல்லும்போது அதன் சத்தம் குறைவதுபோல, விண்மீன் திரள்கள் நம்மைவிட்டு தூரமாகச் செல்லும்போது அவற்றின் ஒளியின் அலை நீளம் நீண்டு, சிவப்பு நோக்கி நகரும்.
ஏற்கெனவே ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில், அலெக்சாண்டர் ஃபிரைட்மேன், ஜார்ஜஸ் லெமைட்ரே ஆகியோர் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் கோட்பாட்டை முன்வைத்திருந்தனர். இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து, 1929இல் எட்வின் ஹப்பிள் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது எனும் உண்மையை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
ஆடம் ரீஸ், சௌல் பெர்ல்முட்டர், பிரையன் ஷ்மிட் ஆகியோரின் தலைமையிலான குழுக்கள் 1998இல், 'டைப் 1ஏ சூப்பர்நோவா'க்களை (Type Ia supernovae) ஆய்வு செய்தபோது, பிரபஞ்சத்தின் விரிவடைதல், அதிவேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனும் உண்மையைக் கண்டறிந்தனர். இதற்காக இவர்களுக்கு இயற்பியலுக் கான நோபல் பரிசு 2011இல் வழங்கப்பட்டது.
மர்ம ஆற்றல்
‘பெருவெடிப்பு' எனும் அதிவேக விரிவாக்கத் துடன்தான் 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தொடங்கியது. நொடிக்கும் குறைவாக நீடித்த இந்த தொடக்கநிலை விரிவாக்கத்துக்குப் பிறகு, பிரபஞ்சம் விரிவடைவதை ஈர்ப்பு விசை குறைக்கத் தொடங்கியது.
ஆனால், அது அப்படியே நீடிக்கவில்லை. பிரபஞ்சம் தோன்றிய 900 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் விரிவாக்கம் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. இந்தப் பிரபஞ்ச விரிவாக்கத்துக்குக் காரணமான, மர்ம ஆற்றலை இயற்பியலாளர்களால் இன்னும் சரியாகக் கண்டறிய முடியவில்லை.
அதனால், அதற்குத் தற்காலிகமாக ‘புலப்படாத ஆற்றல்' (Dark energy) எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்த புலப்படாத ஆற்றல் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் தோராயமாக 68.3% முதல் 70% வரை நிறைந்துள்ளது.
பொதுவாக, பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் திரள்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு விசை, பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை மெதுவாக்குவதாக அறிவியலாளர்கள் நம்பினர். ஆனால், அதற்கு நேர்மாறாகப் பிரபஞ்சத்தை வெளிப்புறமாக அதிவேகமாகத் தள்ளும் ஓர் ‘எதிர் அழுத்தத்தை’ இந்த புலப்படாத ஆற்றல் ஏற்படுத்துகிறது.
ஆற்றல் திரவம்
இந்த புலப்படாத ஆற்றல் என்பது என்ன? இது குறித்து இயற்பியலாளர்கள் நிறைய யோசனைகளைச் சொல்கிறார்கள். புலப்படாத ஆற்றல் என்பது வெற்றிட ஆற்றலாக இருக்கலாம் அல்லது ‘குவின்டெசென்ஸ்’ (Quintessence) எனப்படும் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கும் ஆற்றல் திரவமாகவோ அல்லது புலமாகவோ (Field) இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் புலப்படாத ஆற்றலைப் பற்றிய மர்மத்தை அவிழ்க்க உலகளாவிய விண்வெளி நிறுவனங்கள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
அவற்றில் சில யூக்ளிட் விண்கலம், நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்றவை. புலப்படாத ஆற்றல் என்பது மனித அறிவுக்கு விடுக்கப்பட்ட பெரிய சவாலாகும்.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com