பத்து வயது சாராவுக்கு ஓவியம் வரையக் கொள்ளைப் பிரியம். ஒரு நாள் காலை எழுந்ததும், அவளது வலது கையில் நடுக்கம். தூரிகையைப் பிடிக்க முயன்றபோது கை ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாள்களில் பார்வையும் மங்கியது. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, அவளுக்கு 'பீடியாட்ரிக் மல்டிபிள் ஸ்கலரோசிஸ்' (Paediatric multiple sclerosis) என்றனர்.
உடலின் வெளிப்புறத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோய்கள் பல. ‘மல்டிபிள் ஸ்கலரோசிஸ்’ (எம்.எஸ்.) பாதிக்கப்பட்டவரைத் தவிர மற்றவர் களால் எளிதில் உணர முடியாதது. இதனால்தான் ‘கண்ணுக்குத் தெரியாத குறைபாடு’ (Invisible Disability) என இது அழைக்கப்படுகிறது.
தீமையில் நன்மை
உடலில் உள்ள நரம்புகளை ‘மயலின்' (Myelin) எனும் மெல்லிய உறை பாதுகாக்கிறது. மின்சாரக் கம்பியைச் சுற்றி இருக்கும் ஞெகிழிக் கவசம் போன்றது இது. நோய் எதிர்ப்பு மண்டலம், தவறுதலாக மயலின் உறையைத் தாக்கி அழிக்கும்போது, மூளையிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் தகவல்கள் தடைப்படுகின்றன.
இதன் விளைவாக ஏற்படுவதுதான் எம்.எஸ். பாதிப்பு. பெரியவர்களைப் போலவே, குழந்தைகளிலும் இது ஒரு ‘ஆட்டோ இம்யூன்' கோளாறாகவே நிகழ்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை என்றாலும், மரபணுக் காரணிகள், வைட்டமின் டி குறைபாடு, சில வைரஸ் தொற்றுகள் இதற்குத் தூண்டுகோலாக இருக்கலாம். அதேநேரம், சேதமடைந்த திசுக்களைச் சீரமைக்கும் திறன் (Neuroplasticity) குழந்தைகளின் மூளைக்கு அதிகம் என்பது ஒரு வரப்பிரசாதம்.
புரிதலில் சிக்கல்
“நேற்று நன்றாகத் தானே இருந்தாய், இன்று ஏன் படுத்திருக்கிறாய்?" என்கிற சுற்றத்தாரின் கேள்விதான் எம்.எஸ். நோயரைப் பெரிதும் ரணப்படுத்தும். அதீத சோர்வு, மனச்சோர்வு, சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு, தசைப் பிடிப்பு போன்றவை வெளியில் தெரிவதில்லை என்பதால், இவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்குவார்கள்.
எம்.எஸ் பாதிப்புள்ள குழந்தைகள் பார்ப்பதற்கு ஆரோக் கியமாகத் தெரிவார்கள். இதனால் பள்ளியில் ஆசிரியர்களும், சக மாணவர்களும் இவர்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
நீண்ட நேரம் உட்கார முடியாமல் போவது அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதால், இவர்கள் பள்ளியில் அசௌகரிய மாக உணரலாம். உடல் சமநிலை இழப்பு காரணமாக மற்ற குழந்தை களுடன் ஓடிப் பிடித்து விளையாட முடியாமல் போவது மன அழுத்தத்தை உண்டாக்கும். மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் தகவல்களைச் சேமித்து வைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், கற்கும் திறன் குறைதலுக்கு வழிவகுக்கிறது.
நவீன சிகிச்சைகள்
இந்நோயைக் கட்டுப்படுத்த மருந்துகள் இல்லை எனும் நிலை தற்போது இல்லை. நோய் தீவிரமடைவதைத் தடுக்கப் பல வழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகளைத் தாண்டி, இப்போது மாத்திரைகள், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் எடுத்துக் கொள்ளும் ‘இன்ஃபியூஷன்' சிகிச்சை கள் வந்துவிட்டன. இவை நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன.
மிகக் கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு, எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களைக் கொண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீரமைக்கும் ஆய்வுகள் வெற்றி பெற்றுவருகின்றன.
மீட்டெடுக்கும் கலை
மருந்துகள் நோயைக் கட்டுப் படுத்தும் என்றால், இழந்த திறன்களை மீட்டெடுப்பவை மறுவாழ்வு பயிற்சிகள். ரோபாட்டிக் பிசியோதெரபி: குழந் தைகள் நடக்கச் சிரமப்படும்போது, அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகை யில் வெளிநாடுகளில் ரோபாட்டிக் கருவிகள் மூலம் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.
இது ஒரு விளையாட்டு போலத் தோன்றுவதால், குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இது அவர்களின் தசை வலிமையை மேம்படுத்தி, சமநிலையைச் சீராக்குகிறது.
ஆக்குபேஷனல் தெரப்பி: பேனாபிடித்து எழுதுவது, சட்டையில் பொத்தான் போடுவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்யக் குழந் தைகள் சிரமப்படலாம். இவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் மூலம் கைகளின் நுண் திறன்களை மேம்படுத்த நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நினைவாற்றல் சிக்கலைத் தீர்க்கக் கணினி வழிப் பயிற்சிகள், ‘மெய்நிகர் உண்மை' (Virtual Reality) தொழில் நுட்பம் மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகள் வழங்கப் படலாம்.
உணவும் வாழ்க்கை முறையும்
எம்.எஸ். பாதிப்புக்கும் வைட்டமின் டி குறைபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, குழந்தைகளின் மீது சூரிய ஒளி படுவதுடன், மருத்துவர் ஆலோசனையுடன் வைட்டமின் டி சத்துணவு வழங்குவது நரம்புகளைப் பலப்படுத்தும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், நட்ஸ், காய்கறிகள் நரம்பு உறையான 'மயலின்' மீண்டும் வளரத் தூண்டுகோலாக அமைகின்றன. எல்லாவற்றையும்விட எம்.எஸ்.பாதிப்புள்ள குழந்தைக்குத் தேவைப்படுவது பரிதாபம் அல்ல, சமமான அங்கீகாரம். “உன்னுடன் நாங்கள் இருக்கிறோம்” எனும் அன்பான சொற்கள், எந்த நவீன மருந்தையும் விட அக்குழந்தையின் நரம்புகளில் அதிக ஆற்றலைச் செலுத்தும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com