டாக்காவில் 1952இல் வங்க மொழிக்காகப் போராடி உயிர் நீத்த மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், யுனெஸ்கோ பிப்., 21ஐ சர்வதேச தாய்மொழி நாளாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தாய்மொழி என்பது ஒருவரின் அடையாளம், பண்பாடு என்பதையும் தாண்டி, மனிதர்களை இணைக்கும் பாலம். "மொழி முதலில் ஒலியாகத்தான் பிறக்கிறது. குழந்தை எழுதப் படிக்கத் தொடங்கும் முன்பே பேசவும் கேட்கவும் செய்கிறது. அதுவே மொழியின் அடிப்படை உயிர்" என்று மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. வரதராசன் குறிப்பிடுகிறார்.
மௌனத்தின் மொழி
பொதுவாகத் தாய்மொழி என்றால் பேசப்படும் மொழிகளே நினைவிற்கு வரும். ஆனால், காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியையே தங்களின் முதல் மொழியாகக் கொண்டுள்ளனர். அவர்களின் சிந்தனை, அறிவு, உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்க கருவியாக சைகை மொழி திகழ்கிறது.
சைகை மொழி என் தாய்மொழி
“தாய்மொழி பேச பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிறந்த நாளிலிருந்தே அதனை நாம் இயல்பாக உள்வாங்குகிறோம். அதுபோலவே எனக்கும் சைகை மொழி இயல்பாக வந்தது. என் பெற்றோர் இருவரும் காது கேளாதவர்கள்; அவர்களுடன் சைகை மொழியிலேயே தொடர்பு கொண்டேன். அதனால் சைகை மொழியே எனக்கும் என் அண்ணனுக்கும் தாய்மொழியாக அமைந்தது,” என்று சட்டக் கல்லூரி மாணவியும், சைகை மொழி மொழிபெயர்ப்பாளருமான ரோஜா பகிர்கிறார்.
சைகை மொழிக்கான அங்கீகாரம்
இந்தியாவில் சைகை மொழி அறிந்தவர்களின் எண்ணிக்கை இன்றும் குறைவு. சைகை மொழிப் பயிற்சியை அதிகரிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் வேண்டுமெனக் காது கேளாதோர் சமூகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. உலகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட சைகை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் தற்போது 22 அலுவல் மொழிகள் உள்ளன. அதில் 23வது மொழியாகச் சைகை மொழியையும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒடிசா மாநிலத்திலுள்ள 'Happy Hands School for the Deaf' பள்ளியின் இயக்குநரான முனைவர் சிபாஜி பாண்டா (Sibaji Panda), காது கேளாதோரின் முதல் மொழி, சைகை மொழி என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அரசின் முயற்சிகள்
தேசிய கல்விக் கொள்கை 2020, இந்திய சைகை மொழியை (ISL) ஒரு மொழியாக அங்கீகரிக்கிறது. சென்னைக்கு அருகிலுள்ள முட்டுக்காடு பகுதியில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளி விவகாரங்கள் துறையின் கீழ் 2005இல் தொடங்கப்பட்ட பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான தேசிய நிறுவனம் (NIEPMD), பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, பயிற்சிகளைச் சிறப்பாக வழங்கி வருகிறது.
- சந்தோஷ் .கி.ச, கட்டுரையாளர்: முதுகலை வணிக மேலாண்மை மாணவர். | தொடர்புக்கு: santhoshshankarbabu2@gmail.com