புதுச்சேரி காரைக்கால் நேருநகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்தில் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது. என்ன சாப்பிட்டார்என்று ஆராய்ந்த போது அவருக்கு யாரோ குளிர்பானம்கொடுத்தது தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் அவருடன் படிக்கும் மாணவி ஒருவரின் தாய் குளிர்பானத்தில் விஷம்கலந்து கொடுத்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த மாணவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் முடியாமல் அந்த மாணவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
தன் மகளை விட நன்றாக படிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கொடுக்கும் அளவுக்கு ஒரு பெண் துணிந்திருப்பது இதுவரை கேள்விப்படாத சம்பவமாக அமைந்துள்ளது. இச்சம்பவம் தனிப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் சிந்திக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
நல்ல மதிப்பெண் பெறுவதற்காக இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் என அனைத்து தரப்பினரும் ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறோம்.இந்த போட்டி மனப்பான்மையே கொலை செய்யும் அளவுக்குஒரு மாணவியின் தாயை தூண்டியுள்ளது.
தேர்வுகளே நடத்தாமல் பல கல்வி முறைகள் முதலிடத்தைப் பெற்று சிறந்த கல்வி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், கற்கும் வேகத்திற்கு ஈடுகொடுத்தும் கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்வுகளே கூடாது என்றுகூட ஒருதரப்பினர் வாதிட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அந்த விவாத்திற்குமேலும் வலு சேர்க்கும் வகையில் அமைகின்றன.
பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை மாணவர்கள் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே தேர்வு முறை பயன்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையை உருவாக்கினால் அது தேர்வு முறையின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
மதிப்பெண் வழங்கும் நோக்கத்தை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் புரிய வைக்க வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை. எந்தப் போட்டியாக இருந்தாலும் ஆரோக்கியமாகஇருக்க வேண்டுமே தவிர, பிறரை அழிக்கும் நோக்கத்தை கொண்டிருக்க கூடாது. இதை அனைவரும் உணர்ந்து மாணவர் சமூகம் நெருக்கடியில்லாமல் கல்வி கற்கும் சூழலை உருவாக்கித் தரும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு.