தமிழகத்துக்கான பிரத்யேக மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அக்டோபர் 15-ம் தேதிவரை அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோன்று நேரடி கருத்துக் கேட்புக் கூட்டமும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தினங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் நழுவ விட வேண்டாம்.
கல்வி என்பது பள்ளி, கல்லூரியில் படித்து வேலைக்கு சென்று சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல. சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறுவதற்கான பிரதான வழிமுறையாகும்.
இந்நிலையில், நெகிழ்வாக, மகிழ்வாகக் கல்வி கற்கும் சூழலை தமிழகமெங்கும் உருவாக்க வேண்டும் என்று நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருகிறது. மனப்பாடக் கற்றல் முறையிலிருந்து செயல்வழி கற்றல் முறைக்கு முழுமையாக மாற வேண்டும் என்கிற ஏக்கமும் நீண்ட காலமாக நீடிக்கிறது. இதுபோக, தேர்வுமுறையில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவைப்படும் ஓய்வு நேரம், உள்கட்டமைப்பு வசதிகள் முதல் கற்பித்தல் முறைவரை பள்ளி தோறும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் இப்படி உங்கள் பகுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் தரமான கல்விக்குத் தேவையான அனைத்தையும் சிந்தியுங்கள், பட்டியலிடுங்கள் அவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.