அன்பு மாணவர்களே,
தேர்வு குறித்து நம் மனதுக்குள் ராட்சத அலைகள் அடித்துக் கொண்டிருக்கும். தேவையில்லாத கலக்கங்கள் நம்மை ஆட்கொண்டிருக்கும். தற்போதைய நிலையில் தேர்வுக்கு நீங்கள் நன்றாகவே தயாராகி இருப்பீர்கள். ஆனாலும் ஏதோ விடுபடல்கள், போதாமைகள் இருப்பதாக எண்ணக் கூடும். அது ஒரு விஷயத்தை அளவு கடந்து யோசித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளே அன்றி வேறல்ல. இதை எவ்வாறு மாற்றப் போகிறோம்?
அது மிகவும் எளிதான காரியம். வகுப்பில் எடுத்த பாடத்தை மீண்டும் நினைத்து பாருங்கள். நீங்கள் முழுவதும் தயாராகி இருக்கும் இறுதி நேரத்தில் புதிய பாடங்களையோ, உங்கள் நண்பர்கள் முக்கியமான கேள்வி என்று இறுதி கட்டத்தில் பரிந்துரைப்பதையோ பொருட்படுத்தி குழம்பிக் கொள்ளாதீர்கள். படித்த பாடங்களை வெறுமனே அசைபோட்டு பாருங்கள். இதில் மனதுக்கு ஓய்வு கொடுப்பதுடன் உடல் ஓய்விலும் கவனம் வேண்டும். உணவில் கவனமாக இருங்கள். குறிப்பாக தேர்வு முடியும் வரை வெளிஇடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
தேர்வுக்கு தயாராவது என்றால் படிப்பது மட்டுமல்ல, உங்களின்பேனா, பென்சில், ஸ்கேல் போன்ற உபகரணங்களை தயாராக வைத்துக் கொள்வதும்தான். முன்னெச்சரிக்கையாக ஒன்றுக்கு இரண்டு பேனாக்கள் வைத்துக் கொள்வது கூடுதல் நலம். அதுபோக பெரும்பாலும் உங்களது தேர்வுக் கூடம் வேறு பள்ளிகளில்தான் இருக்கும். உங்கள் வீட்டுக்கும் அந்த பள்ளிக்குமான தொலைவு எவ்வளவு என்பது குறித்து முன்பே அறிந்து கொள்வதும் அவசியம். குறிப்பாக தேர்வு நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இப்போது இருந்தே தயார் செய்ய தொடங்குங்கள்.