அன்பு மாணவர்களே....
மாணவப் பருவத்தில் மாறுபட்ட புதிய அனுபவங்கள் சமுத்திரம் போல் பரந்து விரியும். இதுவரை நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது. ஆம், எதிர்வரும் பொதுத் தேர்வுதான் அந்த பரிசோதனைக் கூடம். நாம் எதை சோதித்து பார்க்கப் போகிறோம். உண்மையாக அந்த பரிசோதனைக் கூடத்துக்குள், இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட துணிச்சல், தன்னம்பிக்கை, வலிகள், திறமை, ஆற்றல், மகிழ்ச்சி, நுண்ணறிவு போன்ற அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தப் போகிறீர்கள்.
ஏனென்றால் பல்வேறு பதற்றங்கள், அச்சங்களுடன் தேர்வை சந்திப்போம். அடிப்படையில் இவை இருக்கவே கூடாது. எனினும் நம் சூழல் அந்த நிலைக்கு இழுத்துச் செல்லும். இதை கையாள்வதே இத்தனை நாட்கள் கற்றுக் கொண்டதற்கு அர்த்தம் பயக்கும். இறுதி நேரத்தில் தேர்வு தயாராகும் மாணவர்களும் இருப்பார்கள். அவர்கள், முதலில் எந்தவொரு நிலையிலும் தங்களை அழுத்திக் கொள்ளக் கூடாது. சிறு பதற்றமும் இல்லாமல் இதுவரை படித்த அனைத்தும் புரிந்து கொள்ளும் வகையில் மீண்டும் ஒருமுறை அலசிப் பார்க்க வேண்டும்.
உங்களால் முடிந்தால் புரிந்தவற்றை இறுதியாக யாரிடமாவது சொல்லிப் பார்க்கலாம். இது புரிந்தவைதானே தவிர மனப்பாடம் செய்தவை அல்ல. அது ஒருவேளை இறுதி நேரத்தில் படிக்கும் உங்கள் வகுப்புத் தோழனாகவோ தோழியாகவோ இருக்கலாம். ஆம்... இதனால் இரட்டைப் பயன்கள் உண்டு. என்றோ ஒரு முறை நம் பாட்டி சொன்ன கதை நமக்கு இன்னும் நினைவு இருக்கிறதல்லவா, சிறு செய்தியையும் சுவாரசிய கதையாக பாட்டி கூறினாரே, அதுபோல் உங்கள் பாடங்களில் புரிந்தவற்றை வெவ்வேறு வடிவங்களில் படிப்பதால் இரு தரப்பினருக்குமே பலன் உண்டு. உள்ளபடியே புதுப்புது யுக்திகளில் முயற்சித்துப் பாருங்கள். தேர்வை ரசித்து எழுதுங்கள்!