அன்பு மாணவர்களே,
ஒரு மனிதனின் பிரம்மாண்டமான வாழ்க்கையின் மாபெரும் அங்கமாக விளங்குகிறது கல்வி. இந்த கல்வியில் உள்ள பல்வேறு கூறுகளில் இருந்துதான் பல ஆளுமைகள் உருவாகிறார்கள். பொதுவாக மொழிப் பாடங்களிலேயே பல்வேறு அடுக்குகள் உள்ளன. தாய்மொழி உட்பட எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வாக்கியத்தை சரியாக உச்சரிக்கும் திறன் உள்ளவர்கள் சிறந்த பேச்சாளராக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
தொழில்ரீதியாக பார்த்தாலும் செய்தி வாசிப்பாளராக காணொலிகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவராக வாய்ப்புண்டு. அதேமொழிப் பாடத்தில் இலக்கணப் பிழைகளின்றி சரியான வாக்கியஅமைப்புடன் எழுதுபவர்களாக இருந்தால் ஒரு எழுத்தாளராகவோ அல்லது இதர பணிகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. மற்றபாடங்களிலும் அதன் தன்மைக்கு ஏற்ப பல திறப்புகள் உள்ளன.
குறைந்தபட்சமாக ஒரு பாடத்தில் ஓர் அடுக்கில் இருக்கும் திறனே அனேக வாய்ப்புகளை உருவாக்கிறது. இப்படியாக ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் திறனை கண்டவறிவதில் நம் சமூகம் மிகவும் பின்தங்கியே உள்ளது. ஒருவனின் மதிப்பெண் மூலம்தான் அவனது ஒட்டுமொத்த அறிவும் உள்ளது என்ற கற்பிதம் இங்கு உள்ளது.
கல்வி என்பதன் பொருள்மதிப்பெண் உடன் மட்டுமே தொடர்பு உள்ளது என்ற பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கின்றனர். அதற்கு அப்பால் ஒரு வெளியைஅமைத்து கொடுக்கவே இல்லை. எனவே, மதிப்பெண் மட்டுமே சர்வ வல்லமையும் கொண்டுள்ளதா என்பதே கேள்வி?
தற்போதைய தொழில்நுட்ப யுகம் அதிக மதிப்பெண் கொண்டவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை என்றிருந்ததை மாற்றியுள்ளது. உலகம் முழுவதும் இந்த போக்குதான். துறைசார்ந்த அறிவுத் திறனும், மொழித் திறனும் கட்டாயம் ஆகிவிட்டது. இதனால் மதிப்பெண்ணுடன் சேர்த்து பலவகை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்காலம் சிறக்கும்.